போக்குவரத்து வசதி இல்லாததால் டோலியில் சுமந்து வரப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
போக்குவரத்து வசதி இல்லாததால் டோலியில் சுமந்து வரப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

திருமலை: ஆந்திராவில் மலைப்பகுதியில் உள்ள கிராமத்துக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் டோலியில் தூக்கிவரப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கும்மரவொன்ச்சி  என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் இங்குள்ளவர்கள் மலையடிவாரத்தில் இருக்கும் சிறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். இப்பகுதி மக்களை பாம்பு, விஷ பூச்சிகள் கடித்துவிட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு வசதிகள் இல்லாததால் பலர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கும்மரவொன்ச்சி கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை டோலி கட்டி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதிகளை கடந்தும், மழை காரணமாக நிரம்பியுள்ள குளம், குட்டைகளில் இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச்சென்று மலையடிவாரத்தை அடைந்தனர்.



பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாடேறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை.   இவ்வாறு டோலி கட்டி தூக்கி வரும்போது அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இனியாவது இப்பகுதி மக்களை காப்பாற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

.

மூலக்கதை