மும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மும்பை: மும்பையில் 4 மாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டோங்கிரி பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 மாடி கட்டிடத்தில், 15 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர்.

சேசாபாரி என்ற பெயருடைய இந்த கட்டிடம் நேற்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கப் போராடினர்.

முன்னதாக கட்டட விபத்து நிகழ்ந்த தெருவானது மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் உடனடியாக வாகனங்களுடன் வர இயலவில்லை.

சிறிது நேரம் கழித்து மீட்பு பணிகள் துவங்கின. 15 குடும்பங்களை சேர்ந்த சுமார் 45க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.

தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்பு படையினர், 12 பேரது சடலங்களை நேற்று மீட்டிருந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், இன்று காலை தகவலின்படி கட்டிட விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கட்டிட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என மோப்ப நாய் உதவியுடன் மீட்புக் குழுவினர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


.

மூலக்கதை