காஞ்சியில் பக்தர்கள் வெள்ளம்: மஞ்சள் பட்டுடுத்தி அருள்பாலித்த அத்திவரதர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சியில் பக்தர்கள் வெள்ளம்: மஞ்சள் பட்டுடுத்தி அருள்பாலித்த அத்திவரதர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 17ம் தேதி வரை 48 நாட்கள், இந்த விழா தொடர்ந்து நடைபெறும்.

முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 16 நாட்களில் சுமார் 19 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் குடியரசு தலைவர், கவர்னர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அத்தி வரதர் வெளிர் மஞ்சள் நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இன்று காலையில் கோயில் அர்ச்சகர்களை போலீசார் உள்ளேவிட மறுத்ததால், அர்ச்சகர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அனைத்து அர்ச்சகர்களும், அத்திவரதர் வைபவத்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அர்ச்சகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை