என்ஐஏவிடம் சிக்கிய நெல்லை வாலிபர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
என்ஐஏவிடம் சிக்கிய நெல்லை வாலிபர்

நெல்லை: தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர்களில் நெல்லையை சேர்ந்த வாலிபரும் என்ஐஏ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் நட்சத்திர ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இதில் கைதான இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை, நாகை, சென்னை, மதுரை மற்றும் கேரளாவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்களிடம் இருந்து லேப்டாப், மெமரி கார்டுகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



இந்நிலையில் ‘அன்சுருல்லா’ என்ற தீவிரவாத அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உருவாக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணையில், இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி அச்சுறுத்தலை ஏற்படுத்த திட்டமிட்டதும், இதற்காக புதிதாக ‘அன்சுருல்லா’ அமைப்பை உருவாக்கி இஸ்லாமிய ஆதரவு ஆட்சியை ஏற்படுத்தவும் முயன்றது தெரிய வந்தது.

இதற்காக சிலரை வெளிநாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் அனுப்பி தாக்குதல் மற்றும் தற்கொலை படை தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இதற்கான நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனிடையே ‘அன்சுருல்லா’ அமைப்புடன் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்த 14 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

இவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர். கைதானவர்கள் அளித்த தகவலில் பேரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நாகை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் நெல்லையை சேர்ந்த முகம்மது இப்ராகிமும் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து முகம்மது இப்ராகிமுடன் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறும் என்று உளவுத்துறையினர் தெரிவித்தனர்.

.

மூலக்கதை