கர்நாடகா ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா விவகாரம், சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகா ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா விவகாரம், சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கர்நாடக மாநில அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகார வழக்கில், சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதால், கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் அதிகார போட்டி, அமைச்சர் பதவிகள் கேட்டு தொந்தரவு என, முதல்வர் குமாரசாமிக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்னைகள் இருந்துவந்தன.

மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி அமைந்ததை அடுத்து ‘ஆபரேஷன் தாமரை’ என்ற திட்டத்தின்படி கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற காய்களை நகர்த்தி வருகிறது. இதன் எதிரொலியாக அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை போன்ற காரணங்களை கூறி காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 16க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


மேலும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றனர்.

மேற்கண்ட எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றால், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சி நிச்சயம் கவிழும் என்பதால், அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், முதலில் ராஜினாமா கடிதம் கொடுத்த 10 எம்எல்ஏக்களும், சில நாட்கள் கழித்து ராஜினாமா கடிதம் கொடுத்த மேலும் 5 எம்எல்ஏக்களும், சபாநாயகர் ராஜினாமாவை ஏற்க மறுப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ‘கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை 16ம் தேதியான நேற்றைக்கு ஒத்தி வைத்திருந்தனர். இதற்கிடையே தற்போது கர்நாடக சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், ஆளும் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை 18ம் தேதி (நாளை) சந்திக்க உள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘எம்எல்ஏக்கள் கொடுத்துள்ள ராஜினாமா மீது சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்’ என்றார். பின்னர் வாதிட்ட சபாநாயகர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘விதிமுறைகளின்படி சபாநாயகர் செயல்படும்போது, அவரின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட முயற்சிப்பது சரியல்ல’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ‘எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் 2 பக்கமும் நியாயம் உள்ளது. இருதரப்புக்கும் பாதகமில்லாத உத்தரவைத்தான் பிறப்பிப்போம்’ எனக்கூறி தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

கர்நாடகாவில் கூட்டணி அரசு நீடிக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, இன்று காலை 10. 30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.



அப்போது, ‘சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

அரசின் மீதான  நம்பிக்கை கோரும் தீர்மானம் நாளை நடப்பதாக தெரிவித்துள்ளதால், அது நடக்கட்டும். 15 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதா? இல்லையா? என்பதை அவரே முடிவு செய்து கொள்ளலாம்.

அதற்காக காலக்கெடு ஏதும் நீதிமன்றம் நிர்ணயம் செய்ய முடியாது.   எம்எல்ஏக்களை விட சபாநாயகர்தான் முக்கியம். அதிருப்தி எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வைப்பது தொடர்பாக, அவர்களை யாரும் வற்புறுத்தக் கூடாது’ எனக்கூறி, அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம், சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பளிக்கும் என்று பாஜ எதிர்பார்த்த நிலையில், தற்போது சபாநாயகரின் முடிவுக்கே நீதிமன்றம் விட்டுவிட்டதால், நாளைய நம்பிக்கை வாக்ெகடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இதனால், முதல்வர் குமாரசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை