ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள்... திணறல்! நடவடிக்கை எடுக்க விருதை பக்தர்கள் எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள்... திணறல்! நடவடிக்கை எடுக்க விருதை பக்தர்கள் எதிர்பார்ப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், வாடகை மற்றும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, கோவிலின் அழகை மீட்டெடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விபச்சித்து முனிவரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு, கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன்மாதேவி, தஞ்சையின் முதல் அரசன் செவ்வப்ப நாயக்கர், குலோத்துங்க சோழ காடவராதித்தன், முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், கர்நத்தம் சுப்ராய செட்டியார், கச்சிராயர் மன்னர் என பல்வேறு காலங்களில் பலரது முயற்சியால் கட்டப்பட்டது.
விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பார்க்க கூடிய வகையில், பிரம்மாண்டமாக காட்சியளித்த இக்கோவில் ஐந்து கோபுரங்கள், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களால் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் , கோவில் அழகு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், முன்மண்டபத்தில் 14 கடைகள், தேரடி உள்ளிட்ட பல இடங்களில் 250க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன.கோவில் அழகை பாதுகாக்கவும், பொதுமக்கள் வழிபாட்டிற்கு உள்ள இடையூறை நீக்கவும் வாடகை ஒப்பந்தத்தை முடித்து, இடத்தை ஒப்படைக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓராண்டுக்கு முன் நோட்டீஸ் வழங்கியது.அவர்கள் காலி செய்யாததால், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 80ன் கீழ் நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி 18ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்திலுள்ள கோவில்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டது.
அதன்படி, சன்னதி வீதி, தேரடி மற்றும் 16 கால் மண்டபங்களில் இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, மாசி மகம் நடந்தது.ஆனால், தமிழக கோவில்களில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது.இதனால், தேரடி, 16 கால் மண்டபம், சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் கடைகள் முளைத்தன.
இதையடுத்து, ஏற்கெனவே அறநிலையத் துறை சட்டம் 80ன் கீழ் கோவில் நிர்வாகம் சார்பில், இணை ஆணையர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 16 கால் மண்டபத்தில் உள்ள கடைகள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், இதற்கான, ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், மற்ற இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

மூலக்கதை