கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு: குமாரசாமி ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்?

தினகரன்  தினகரன்
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு: குமாரசாமி ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்?

பெங்களூரு: கர்நாடக  மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் காலதாமதம் செய்து வருவதை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வாதங்கள் முடிந்து இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக குமாராசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளும்கட்சி மீது அதிருப்தி கொண்ட 14 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கொடுத்த கடிதத்தின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்துவருவதாக எம்எல்ஏக்கள்  சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அம்மனு மீதான விசாரணை  நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முதலில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதாடும்போது, ‘‘அதிருப்தி எம்எல்ஏ.க்கள் சிலரின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறேன் என சபாநாயகர் கூறுகிறார். அதற்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. எங்கள் கட்சிக்காரர்கள் கொடுத்துள்ள ராஜினாமா மீது சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். 18ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.  எங்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் விருப்பத்திற்கு உட்பட்டு ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்கள். அதனால் அதற்கு மாறாக செயல்பட சொல்ல சபாநாயகருக்குஉரிமை கிடையாது’’ என வாதிட்டார்.அதை தொடர்ந்து சபாநாயகர் தரப்பு மூத்த வக்கீல்  அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “எம்.எல்.ஏ.க்கள் தரப்பு கூறுவது போல தகுதி நீக்க நடவடிக்கைக்கு  முன்பே ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடும்  சபாநாயகர் செயல்படவில்லை.  சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டமாக இருக்கிறது. சபாநாயகர் பதவி அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது.  விதிமுறைகளின் படி சபாநாயகர் செயல்படும்போது, அவரின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட முயற்சிப்பது சரியல்ல’’ என வாதிட்டார்.இதையடுத்து குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் வாதிடுகையில், ‘‘அடுத்தடுத்து ராஜினாமாக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராஜினாமா செய்துள்ளவர்கள் எதிர்க்கட்சியில் சேர்ந்து அமைச்சராக திட்டமிட்டு இருக்கிறார்கள். இது அவர்களது தனிப்பட்ட கோரிக்கை கிடையாது. இவை அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது சபாநாயகருடைய கடமையாகும் அதைத்தான் அவர் செய்து வருகிறார்’’ என வாதம் செய்தார்.இதையடுத்து, நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு 15 எம்.எல்.ஏக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே. குறிப்பாக சபாநாயகருக்கு அலுவலக ரீதியாக எத்தனை வேலைகள் இருந்தாலும் 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்கள் என்றால் அதுதான் அவருக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். அது அவரது கடமையும் ஆகும். சபாநாயகர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என கருத்து தெரிவித்து வருகிறீர்கள். ஆனால் கடந்தாண்டு கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பை 24 மணி நேரத்தில் நடத்த உத்தரவிட்டோம். அப்போது அது உங்களுக்கு சாதகமாக இருந்ததால் தானே எதிர்க்கவில்லை?. இருப்பினும் இந்த விவகாரத்தில் இருதரப்பிலும் நியாயம் உள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது’’ என தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 17ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என்று கூறினர்.* வக்கீல் முகுல் ரோத்தகி: எம்.எல்.ஏக்கள் விருப்பத்திற்கு  உட்பட்டு ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்கள். அதனால் அதற்கு மாறாக  செயல்பட சொல்ல சபாநாயகருக்கு உரிமை கிடையாது.* வக்கீல் ராஜீவ் தவான்: அடுத்தடுத்து ராஜினாமாக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராஜினாமா செய்துள்ளவர்கள் எதிர்க்கட்சியில் சேர்ந்து அமைச்சராக திட்டமிட்டு இருக்கிறார்கள்.* நீதிபதிகள்: 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்கள் என்றால் அதுதான் சபாநாயகருக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும்.

மூலக்கதை