சபரிமலையில் மாத பூஜை காலங்களில் பம்பை வரை பக்தர்களின் வாகனம் செல்ல அனுமதி: கேரள ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
சபரிமலையில் மாத பூஜை காலங்களில் பம்பை வரை பக்தர்களின் வாகனம் செல்ல அனுமதி: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பம்பை ஆறு திசை மாறி ஓடியது. தேவசம்போர்டுக்கு ெசாந்தமான ஏராளமான கட்டிடங்கள் மற்றும் கடைகள் இடிந்து விழுந்தன. வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் பலத்த சேதம் அடைந்தன. இதையடுத்து பம்பையில் தனியார் வாகனங்கள் ெசல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் நிலக்கலில் வாகனங்களை நிறுத்தி விட்டு கேரள அரசு பஸ்சில் பம்பை செல்லவேண்டும். தமிழக அரசு பஸ்கள் கூட பம்பைக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு பம்பையில் ஆய்வு நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் தற்ேபாது பம்பையில் ஓரளவு நிலமை சீரடைந்துள்ளதால் பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாத பூஜை காலங்களில் பக்தர்கள் வாகனங்களை பம்பை வரை செல்ல அனுமதியளித்து உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால் வாகனங்களை பம்பையில் நிறுத்தக்கூடாது. பக்தர்களை இறக்கிவிட்ட பின்னர் வாகனங்களை நிலக்கலில் நிறுத்த வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடக்கம்சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாலை மற்றும் ரயில் மார்க்கமாக மட்டுமே செல்ல முடியும். விமானத்தில் வரும் பக்தர்கள் திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இறங்கி அங்கிருந்து ரயில் அல்லது சாலை மார்க்கமாக சென்று வருகின்றனர். இந்நிலையில் விமான பயணிகளின் வசதிக்காக தனியார் நிறுவனம் ஒன்று கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்க தீர்மானித்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலடியில் இருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் இயக்கப்படுகிறது. தினமும் 6 முறை சர்வீஸ் உண்டு. இந்த ஹெலிகாப்டரில் பைலட் உள்பட 4 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். வரும் மண்டல காலமான நவம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை ஹெலிகாப்டர் இயக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஹெலிகாப்டர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை