சாதித்து காட்டுங்கள் வீரர்களே * முன்னாள் நட்சத்திரங்கள் வேண்டுகோள் | ஜூலை 13, 2019

தினமலர்  தினமலர்
சாதித்து காட்டுங்கள் வீரர்களே * முன்னாள் நட்சத்திரங்கள் வேண்டுகோள் | ஜூலை 13, 2019

 லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் உலக கோப்பை பைனலில்  இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை முத்தமிட காத்திருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. 45 லீக் போட்டிகள் முடிந்த பின் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் நாடு திரும்பின. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அரையிறுதியுடன் நடை யை கட்டின.

சொந்த மண்ணில் அசத்திய இங்கிலாந்தும், ‘கறுப்பு குதிரை’ என வர்ணிக்கப்பட்ட நியூசிலாந்தும் பைனலுக்கு முன்னேறின. இன்று லண்டனில் உள்ள பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் மல்லுக்கட்ட உள்ளன.

சொந்தமண் பலம்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் லீக் சுற்றுடன் நடையை கட்டிய இங்கிலாந்து, இதன் பின் எழுச்சி பெற்றது. பல்வேறு தொடர்களில் ரன்மழை பொழிந்தது. உலக கோப்பை தொடரை சிறப்பாக துவக்கியது. நடுவில் திடீரென சொதப்பியது. இதன் பின் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

இத்தொடரில் சராசரி 71.00 ரன்கள் வைத்துள்ள ஜேசன் ராய், ஜோ ரூட் (549 ரன், சராசரி 68.62), பேர்ஸ்டோவ் (496 ரன், 49.60), 22 சிக்சர் அடித்த கேப்டன் இயான் மார்கன் (362 ரன்) என பேட்டிங்கில் கைகொடுக்க பலர் காத்திருக்கின்றனர். 

இவர்களுடன் ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்சும் (381 ரன், 7 விக்.,) தன் பங்கிற்கு உதவுகிறார். பின் வரிசையில் பட்லர் வெற்றிகரமாக போட்டியை முடித்து தர காத்திருக்கிறார்.

மிரட்டல் பவுலிங்

பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க் உட் (17), கிறிஸ் வோக்ஸ் (13), பிளங்கட் (8) கூட்டணி மிரட்டுகின்றனர். இவர்களுடன் இளம் ஜோப்ரா ஆர்ச்சர், முக்கிய பவுலராக வலம் வந்து கொண்டுள்ளார். ‘சுழலில்’ அடில் ரஷித் இதுவரை 11 விக்கெட் சாய்த்து அணிக்கு நம்பிக்கை தருகிறார்.

தடுமாறிய நியூசி.,

நியூசிலாந்து அணி துவக்கத்தில் 6 போட்டிகளில் தோற்காமல் வலம் வந்தது. அடுத்து சறுக்கிய இந்த அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியடைந்தது. அரையிறுதியில் வலிமையான இந்தியாவை எதிர்பார்க்காத வகையில் சாய்த்து பைனலுக்குள் நுழைந்தது.

துவக்க வீரர் கப்டில் இலங்கைக்கு எதிராக 73 ரன் எடுத்தார். இதன் பின் அவ்வளவு தான், அடுத்த 8 போட்டியில் 3ல் தான் இரட்டை இலக்க ரன்களை (25, 35, 20) தாண்டினார். இவருடன் இணையும் நிக்கோல்ஸ், மன்றோ என இருவரும் சொதப்புகின்றனர்.

‘மிடில் ஆர்டரில்’ ராஸ் டெய்லர் (335 ரன்), கேப்டன் வில்லியம்சன் கூட்டணி மட்டும் ஆறுதல் தருகிறது. அடுத்து நீஷம் (213) பரவா யில்லை. வேறு யாரும் இத்தொடரில் இதுவரை 200 ரன்களை கூட எடுக்கவில்லை.

‘டாப்–3’ பவுலர்

உலக கோப்பை தொடரில் சிறந்த பவுலர்களுக்கான ‘டாப்–12’ பட்டியலில் 3, குறைந்த ரன்கள் விட்டுத்தந்த ‘டாப்–20’ பவுலர்களில் 5 வீரர்கள் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் தான். பெர்குசன், பவுல்ட்டுடன், மாட் ஹென்றி (13), நீஷம் (12) என பலரும் பொறுப்பாக செயல்படுகின்றனர். தவிர, கிராண்ட்ஹோம், ‘சுழல்’ சான்ட்னரும் (6 விக்.,) இணைந்து சீரான இடைவெளியின் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்.

 

2

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் நியூசிலாந்து அணி இரண்டாவது முறையாக பங்கேற்கிறது. இதற்கு முன் கடந்த தொடர் (2015) பைனலில் ஆஸ்திரேலியாவிடம் 183 ரன்னுக்கு சுருண்டு கோப்பை இழந்தது. 

 

4

இங்கிலாந்து அணி 1979, 1987, 1992க்குப் பின் நான்காவது முறையாக பைனலில் களமிறங்குகிறது. இதில் விண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தானிடம் தோற்று கோப்பை இழந்தது.  

 

40

இங்கிலாந்தில் ஐந்தாவது முறையாக உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் 1979க்குப் பின் அதாவது 40 ஆண்டுகள் கழித்து சொந்தமண்ணில் பைனலில் பங்கேற்கிறது இங்கிலாந்து. இம்முறை சாதித்தால் இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்குப் பின் தொடரை நடத்திய அணி கோப்பை வென்றது என சாதனை படைக்கலாம்.

 

 9,969

இங்கிலாந்து அணி கடைசியாக 1992 உலக கோப்பை தொடரின் பைனலில் (மெல்போர்ன், ஆஸி.,) பங்கேற்றது. இதில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பை இழந்தது. இதன் பின் 27 ஆண்டுகள் கழித்து அதாவது 9,969 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் பைனலில் பங்கேற்கிறது.

 

லார்ட்ஸ் எப்படி

பைனல் நடக்கவுள்ள லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் 30,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இங்கு பேட்டிங் செய்யும் அணிகளின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 271 ரன்கள். கடைசியாக இங்கு நடந்த 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி தான் வென்றது.

* உலக கோப்பை தொடரில் இங்கு நடந்த 4 போட்டியிலும் முதலில் பேட் செய்த அணிகளே (பாக்., 315/9, ஆஸி., 243/9, ஆஸி., 308/7, பாக்., 285/7) வெற்றி பெற்றன.

 

‘மின்னல்’ ஜேசன் ராய் 

உலக கோப்பை தொடரில் 7 போட்டியில் சந்தித்த 364 பந்துகளில் 426 ரன்கள் குவித்துள்ளார் இங்கிலாந்தின் ஜேசன் ராய். இதில் 5 முறை 50 ரன்னுக்கும் மேல் எடுத்தார். காயத்தால் இவர் பங்கேற்காத இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோற்றது. மீண்டும் வந்த பின் வெற்றி தொடர்கிறது. 

 

‘மிரட்டும்’ ஆர்ச்சர்

இங்கிலாந்து உலக கோப்பை அணியில் முதலில் சேர்க்கப்படாதவர் ஜோப்ரா ஆர்ச்சர் 24. உலக கோப்பை தொடரில் 10 போட்டியில் 19 விக்கெட் வீழ்த்தினார். இவர் வீசிய 90.5 ஓவர்களில் (545 பந்துகள்), 338 பந்துகளில் ரன் எதுவும் தரவில்லை. சராசரி 22.05 (10 ஓவரில் கொடுத்த ரன்) தான்.  இவர், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட அதிக வாய்ப்புள்ளது. 

 

‘கூல்’ வில்லியம்சன் 

நியூசிலாந்து பேட்டிங்கில் எந்த இக்கட்டான நிலையிலும் ‘கூலாக’ செயல்படுவார் கேப்டன் வில்லியம்சன். இங்கிலாந்து மண்ணில் அதிக சராசரி (72.00 ரன்) வைத்துள்ளார். உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் ‘நம்பர்–1’ இவர் தான். 9 போட்டியில் 548 ரன் எடுத்த வில்லியம்சன் இன்றும் மிரட்டலாம்.

 

பவுல்ட் ‘கூட்டணி’

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்ட். இதுவரை 17 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இவரது சகா பெர்குசன். 18 விக்கெட் வீழ்த்தினார். இவர்களது கூட்டணி நிச்சயம் இங்கிலாந்துக்கு தொல்லை தரும். 

மூலக்கதை