கர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் 5 நாட்களில் பா.ஜ. ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகாவில் ஆளுங்கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் நாளுக்கொரு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஆட்சியை தக்க வைக்கும் விதமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நேற்று காலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் முதல்வர் குமாரசாமி வழங்கினார். இதையடுத்து நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவதற்கான தேதியை அறவிக்க சபாநாயகர் தலைமையில் சட்டசபை ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் ம.ஜ.த. சார்பில் முதல்வர் குமாரசாமி; காங்கிரஸ் சார்பில் சட்டசபை காங். குழு தலைவர் சித்தராமையா துணை முதல்வர் பரமேஸ்வர்; பா.ஜ. சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'ஜூலை 18ம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தலாம்' என சபாநாயகர் தெரிவித்தார். இந்நிலையில் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல குமாரசாமி தவறிவிட்டார். அவரது கட்சியைச்சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே குமரசாமியை முதல்வராக ஏற்க விரும்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின் இந்த அரசு கவிழும், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் பா.ஜ. ஆட்சியை அமைக்கும். எங்களது கட்சி (பா.ஜ.) எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

மூலக்கதை