அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து வாங்கியஎஸ்400 ஏவுகணை துருக்கி வந்தது

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து வாங்கியஎஸ்400 ஏவுகணை துருக்கி வந்தது

அங்காரா: அமெரிக்காவின் தொடர் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்தபடி எஸ்400 ஏவுகணைகள் துருக்கி வந்தடைந்தது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் துருக்கியும் உறுப்பினராக உள்ளது. இந்த நாடு எஸ்400 என்ற ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை நடுவானில் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த எஸ் 400 ஏவுகணையை வாங்கக் கூடாது என துருக்கிக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது.  2 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஏவுகணை வாங்க ரஷ்யாவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை திரும்ப பெறாவிட்டால் துருக்கி பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா சமீபத்தில் துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்தது. அதில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்குவது நேட்டோ கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமானது எனவும், இதன் உதவியால் எப் 35 ரக போர் விமானங்களை தயாரிக்க துருக்கியை அனுமதிக்க மாட்டோம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி எஸ் 400 ஏவுகைணையை துருக்கி வாங்கியுள்ளது. இந்த ஏவுகணை நேற்று துருக்கி தலைநகர் அங்காரா அருகேயுள்ள விமான படை முகாமை வந்தடைந்தது. அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பையும் மீறி நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரு நாடு முதல்முறையாக இந்த ஏவுகணையை வாங்கி இருப்பது, உலகளவில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை