போலீஸ் காவலில் இருந்து 17 வெளிநாட்டினர் தப்பி ஓட்டம்

தினகரன்  தினகரன்
போலீஸ் காவலில் இருந்து 17 வெளிநாட்டினர் தப்பி ஓட்டம்

நொய்டா:  உத்தரப் பிரதேசத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கி இருந்ததால் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரில் 17 பேர், போலீஸ் காவலில் இருந்து தப்பி சென்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியில் காலாவதியான விசா, பாஸ்போர்ட்  மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வெளிநாடுகளை சேர்ந்த 60 பேரை கடந்த புதனன்று போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் நைஜிரியா, கென்யா, தான்சானியா, ஜிம்பாவே , ஐவோரி கோஸ்ட் மற்றும் அங்கோலாவை சேர்ந்தவர்கள். இவர்களில் 28 பேர் பெண்கள். இவர்களில் முறையான ஆவணங்களை சமர்பித்த 12 பேரை நேற்று முன்தினம் காலை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில், சுரஜ்பூரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் காவலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினரில் 17 பேர் குளியலறை ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றுள்ளனர். அவர்களை போலீசார்  தேடி வருகின்றனர். மேலும், இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவலில் இருந்த வெளிநாட்டினர் தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை