சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்... மத்திய அமைச்சரிடம் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சேலம்சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்... மத்திய அமைச்சரிடம் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, இத்திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் 5 மாவட்டத்தில் இருந்து தேர்வான திமுக எம்பிக்களான எஸ். ஆர். பார்த்திபன் (சேலம்), செந்தில்குமார் (தர்மபுரி), கவுதமசிகாமணி (கள்ளக்குறிச்சி), கணேசன் செல்வம் (காஞ்சிபுரம்), அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகிய 5 பேரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை நேற்று சந்தித்து வலியுறுத்தினர்.

இது குறித்து அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் கோடியில் சேலம்-சென்னை இடையே 276 கி. மீ. , தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்-சென்னை இடையே ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ளன.

இந்த 3 சேலம்-சென்னை வழித்தடங்களுக்கும், புதிதாக அமையவுள்ள 8 வழிச்சாலைக்கும் 40 கி. மீ. , மட்டுமே பயண தூரம் குறைவு. இதற்காக ரூ. 10 ஆயிரம் கோடியை விரயம் செய்வது, பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதும் ஏற்புடையது அல்ல.

இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் குழந்தைகளுடன் நடுத்தெருவில் போராடிக்கொண்டுள்ளனர். எனவே, ஏற்கனவே உள்ள 3 வழித்தடங்களை விவசாய நிலங்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த மனுவில் எம்பிக்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்ற அமைச்சர் நிதின்கட்கரி, ‘‘இத்திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இருப்பினும் இக்கோரிக்கையை பரிசீலிக்கிறோம்’’ எனக்கூறியதாக எம்பிக்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை