25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது ரயில்

தமிழ் முரசு  தமிழ் முரசு
25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது ரயில்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் ரயில் இன்று காலை புறப்பட்டது. இதனை ரயில்வே மேலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3. 5 கி. மீ வரை ராட்சத பைப்லைன் அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் 2 கட்ட சோதனை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில், 3 மோட்டார்கள் மூலம் ரயில்களில் உள்ள 50 வேகன்களுக்கு குடிநீர் ஏற்றப்பட்டது.

முதலில் 27 வேகன்களில் 70 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பினர். ஆனால் பாதுகாப்பு கருதி 20 ஆயிரம் லிட்டர் வீணாக வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து மற்ற அனைத்து வேகன்களிலும் குறிப்பிட்ட அளவான 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை யார்டில், ஜோலார்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக் வர்மா, முதுநிலை பகுதி பொறியாளர் கணேசன் ஆய்வு செய்தனர்.

இன்று அதிகாலை 4. 30 மணியளவில் 50 வேகன்களில் தயாராக இருந்த ரயிலில் இன்ஜின் இணைக்கப்பட்டது.

அதன் பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இன்ஜினை பூக்கள், வாழை மரங்களால் அலங்கரித்து பூஜை செய்தனர். காலை 7 மணியளவில் அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், யார்டில் நிறுத்தப்பட்ட வேகன்களை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து 7. 15 மணியளவில் ரயிலை ஜோலார்பேட்டை ரயில்வே மேலாளர் சுந்தரமூர்த்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் அழகர்சாமி, கண்காணிப்பு பொறியாளர் சுந்தரம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மேலாண் மை இயக்குனர் மகேஸ்வரன் கூறியதாவது: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 50 வேகன்களில் 50 ஆயிரம் லிட்டர் வீதம் 25 லட்சம் லிட்டர் கொண்டு செல்லப்படுகிறது. சிக்னல்கள் சரியாக இருந்தால் 5 மணி நேரத்தில் ரயில் சென்னை வில்லிவாக்கத்திற்கு சென்று சேரும்.

அங்கிருந்து தண்ணீர் பரிசோதனை செய்யப்பட்டு, புழல் குழாய்கள் வழியாக இணைத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் சேகரிக்கப்படும். அங்கிருந்து லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

ரயில்களில் தண்ணீர் கொண்டு செல்லும் ‘டிரிப்’ படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை