புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்.... ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்.... ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுகக்ப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது. மேலும் கிரண்பேடி தனது அதிகார வரம்பை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார் என முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.இந்நிலையில் புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், துணை நிலை ஆளுநருக்கு, அதற்கான அதிகாரமில்லை என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஜூன் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். பின்னர் ஜூன் 04-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்றும் அதே நேரம் நிதி சார்ந்த முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மூலக்கதை