கோவாவிலும் கட்சி தாவிய 10 காங். எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் இணைந்தனர்: டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு

தினகரன்  தினகரன்
கோவாவிலும் கட்சி தாவிய 10 காங். எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் இணைந்தனர்: டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு

புதுடெல்லி: கர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் கட்சி தாவல் பரபரப்பு தொற்றி உள்ளது. காங்கிரசின் 10 எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் முறைப்படி இணைந்தனர். அவர்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.கோவா மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜ 13, காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களைக் கைப்பற்றின. குறைவான இடங்களை பெற்றாலும், கோவா முன்னணி கட்சி, சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைத்தது.  இந்த நிலையில், மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவைப் போல், கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு தாவினர்.அக்கட்சியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான சந்திரகாந்த் கவ்லேகர் உட்பட 10 எம்எல்ஏ.க்கள் நேற்று முன்தினம் காங்கிரசில் இருந்து விலகினர். இந்நிலையில், 10 எம்எல்ஏ.க்களும் நேற்று முறைப்படி பாஜ.வில் இணைந்தனர். அம்மாநில பாஜ முதல்வர் பிரமோத் சாவந்த் 10 எம்எல்ஏ.க்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பாஜ தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்றார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. 10 எம்எல்ஏ.க்கள் இணைந்துள்ளதால் பாஜ.வின் பலம் 27 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சியை தக்க வைக்க கூட்டணிகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் காங்கிரசின் பலம் 5 ஆக சரிந்துள்ளது. தங்கள் கட்சி எம்எல்ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி விட்டதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ், ஜனநாயகத்தை பாஜ கொன்று விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் கோவா அரசியலிலும் பரபரப்பு நிலவி வருகிறது.‘அவர்களாகவே வந்தனர்’: காங்கிரசின் குற்றச்சாட்டு குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ‘‘10 எம்எல்ஏ.க்களும் அவர்களாகவே, எந்த நிபந்தனையுமின்றி பாஜ.வில் இணைந்துள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதில், பாஜ.வின் பங்கு எதுவுமில்லை,’’ என்றார். கட்சி தாவிய சந்திரகாந்த் கவ்லேகர் கூறுகையில், ‘‘மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டுமெனில், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எதுவும் செய்ய முடியாது.          தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் முடிவு எடுத்துள்ளதால் காங்கிரசில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. கோவாவில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தால் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்,’’ என்றார்.உதவிய கட்சிகள் அம்போ: கட்சி தாவிய 10 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கும் அமைச்சரவையில் இடம் தர பாஜ தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.    கோவா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி அமைச்சர்களை கழற்றி விட்டு, இவர்களுக்கு பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாஜ ஆட்சி அமைப்பதற்கு உதவிய கோவா முன்னணி கட்சி, சுயேச்சைகள் அதிருப்தியில் உள்ளனர்.செல்லக்குமார் ஆலோசனை கோவா நிலவரம் குறித்து ஆராய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கோவா காங்கிரஸ் பொறுப்பாளருமான செல்லக்குமார் எம்பி.யை காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் இரவு கோவா அனுப்பியது. அவர், மீதமுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 5 பேருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து 5 எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து எங்கள் எம்எல்ஏ.க்களை பாஜ இழுத்துள்ளது. மாநிலத்தின் நலனை சமரசம் செய்து, எங்கள் எம்எல்ஏ.க்கள் 10 பேர் பாஜ.வில் இணைந்துள்ளனர். கர்நாடகா உட்பட நாடு முழுவதும் இதே பாணியை பிரதமர் மோடியும், பாஜ தலைவர் அமித் ஷாவும் பின்பற்றுகின்றனர். அரசியலை ‘பண விளையாட்டாக’ பாஜ மாற்றிவிட்டது. பாஜ.வுக்கு எந்த கொள்கையும் இல்லை. ஒட்டு மொத்த அரசியலையும் அவர்கள் வியாபாரமாக்கி விட்டனர்,’’ என்றார்.

மூலக்கதை