ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா: தென்கொரியா, ஜப்பான் கண்டனம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா: தென்கொரியா, ஜப்பான் கண்டனம்

குறைந்த தூர இலக்கினைத் தாக்கும் இரு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல் என தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சுமார் 490 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை பெற்ற இரு ஏவுகணைகளை நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள NAMPO-வில் இருந்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கில் உள்ள கடல்பகுதியை நோக்கி ஏவி சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகளின் கூட்டுப் பயிற்சி தொடங்கி உள்ளதை அடுத்து இத்தகைய சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாகவும் தென்கொரிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே இத்தகைய கூட்டுப்பயிற்சி நடத்தப்படுவதாக தென்கொரியா விளக்கமளித்துள்ள போதிலும், இதனை தங்கள் நாட்டிற்கு விடப்படும் அச்சுறுத்தலாகவே வடகொரியா கருதுகிறது. இதனால் இத்தகைய பயிற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் வடகொரியா, இது போன்ற ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனிடையே நிலைமையை நன்கு கண்காணித்து வருவதாகவும், வடகொரியா அச்சுறுத்தும் விதமான நடவடிக்கையை தொடருமானால் தக்க பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக உள்ளதாகவும் தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை