பாஜ, காங்கிரஸ் அல்லாத கூட்டணி சந்திரசேகர ராவின் முயற்சி புதிய வடிவத்தில் தொடரும் : டிஆர்எஸ் தகவல்

தினகரன்  தினகரன்
பாஜ, காங்கிரஸ் அல்லாத கூட்டணி சந்திரசேகர ராவின் முயற்சி புதிய வடிவத்தில் தொடரும் : டிஆர்எஸ் தகவல்

ஐதராபாத்: ‘‘தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, பாஜ, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கும் சந்திரசேகர ராவின் முயற்சி புதிய வடிவத்தில் தொடரும்’’ என தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவர் கே.டி.ராமராவ் கூறி உள்ளார். மத்தியில் பாஜவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதேபோல் மற்றொருபுறம், பாஜ, காங்கிரஸ் அல்லாத முன்னணி ஒன்றை உருவாக்க தெலங்கானா முதல்வரும், டிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர ராவ் முயற்சிகளை முன்னெடுத்தார். அவரும் பல்வேறு மாநில கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி உள்ளார். அவரது முயற்சி தோல்வி அடைந்ததாக கூறப்படும் நிலையில், சந்திரசேகர ராவின் மகனும், டிஆர்எஸ் தலைவருமான கே.டி.ராமராவ், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:சந்திரபாபு நாயுடுவின் முயற்சியானது, விரக்தி அடைந்த நேரத்தில் விரக்தி அடைந்த நடவடிக்கையாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் ரீதியாக அம்மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பிரதமர் மோடியை வில்லனாக சாயம் பூசி கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மோடிக்கோ, பாஜ.வுக்கோ மவுசு கிடையாது. அப்படியிருந்தும், அவர்களுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு போர்கொடி தூக்குவது, அவர் எந்தளவுக்கு விரக்தி அடைந்துள்ளார் என்பதை காட்டுகிறது. ஒரு முதல்வராக தோல்வி அடைந்து விட்டதை மறைப்பதற்காக, பாஜவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை கூட்டணி சேர்ப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பது எங்களின் எண்ணமல்ல. தேசத்தின் நலன் கருதி பாஜ, காங்கிரஸ் அல்லாத ஒரு முன்னணியை ஏற்படுத்தும் எங்கள் முயற்சி தொடரும். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, இதற்கான புது வடிவ முயற்சியில் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் ஈடுபடுவார். எதிர்க்கட்சிகள் இணைந்த ‘கிச்சடி’ அரசு அமைப்பது போன்றதாக எங்களின் முயற்சி இருக்காது. அதை நாங்கள் எப்படி வடிவமைக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மூலக்கதை