தமிழகம். புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகம். புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகம். புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழுவு பகுதி வலுப்பெறும் என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கூறியுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 30-50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் மதுரவாயல், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், சாலிகிராமம், எழும்பூர், அயனாவரம், கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி, போரூர், பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, தரமணி, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவு முழுவதுமாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. வானிலை ஆர்வலர் செல்வக்குமார் பேட்டி: மன்னார்குடியில் பேட்டியளித்த செல்வக்குமார், மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்தார். புதன்கிழமை மதியம், இந்த தாழ்வு நிலை சேலம் நோக்கி நகர்வதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மேலும், டெல்டா பகுதிகளில் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த புயல் நவம்பர் 29 -ம் தேதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை