நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்

தினகரன்  தினகரன்
நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்

திருமலை: தந்தை, காதலனுக்கு உதவி செய்ய வசதியான 7 பேரை இளம்பெண் ஒருவர் திருமணம் செய்துநகை, பணத்தை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், காஜிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கொம்மலுறு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணாவிற்கும் பிரகாசம் மாவட்டம்  கித்தலூரை சேர்ந்த ஆனந்த்ரெட்டி மகள் மோனிகாவுக்கும்(30) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களுக்கு பிறகு ஆனந்த்ரெட்டி, ராமகிருஷ்ணாவிடம் கூறிவிட்டு மகளை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும், மனைவி திரும்பி வராததால் ராமகிருஷ்ணா, மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதுபற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது மோனிகாவும் அவரது தந்தை ஆனந்த் ரெட்டியும் வீட்டை காலி செய்துவிட்டு ஊரைவிட்டே சென்றதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து ராமகிருஷ்ணா காஜிப்பேட்டை   போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில்,   மோனிகா 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும் ராமகிருஷ்ணாவை 5வதாக திருமணம் செய்ததும் தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமகிருஷ்ணாவை விட்டுவிட்டு மோனிகா, ஐதராபாத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு  விசாகப்பட்டினத்தில் குடும்பம் நடத்தி வருவது தெரிய வந்தது.இதையடுத்து காஜிப்பேட்டை போலீசார் தேடுவதை அறிந்த மோனிகா, அந்த வாலிபரை விட்டுவிட்டு ஐதராபாத்துக்கு வந்து அங்கு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையே மோனிகாவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஐதராபாத்தில் வைத்து அவரை கைது செய்தனர். காஜிப்பேட்டைக்கு நேற்று அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பணம் மற்றும் நகைக்காக வசதி படைத்த ஆண்களை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது. அவ்வாறு திருமணம் செய்துகொண்டவர்களுடன் வேண்டுமென்றே ஏதாவது ஒரு பிரச்னையை ஏற்படுத்தி நகை, பணத்துடன் அவர்களை பிரிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர்களிடம் இருந்து பெறும் நகை, பணத்தை தனது காதலனான சண்டி நாயக் மற்றும் தந்தை ஆனந்த்ரெட்டியிடம் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த மோனிகாவின் தந்தை ஆனந்த் ரெட்டி,  காதலன் சண்டி நாயக்கையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.  தந்தை மற்றும் காதலனுக்கு உதவி செய்ய இளம்பெண் ஒருவர், 7 பேரை திருமணம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை