நாட்டில் பரவியுள்ள ஊழலை ஒழிக்கவே ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்து : பிரதமர் பேச்சு

தினகரன்  தினகரன்
நாட்டில் பரவியுள்ள ஊழலை ஒழிக்கவே ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்து : பிரதமர் பேச்சு

ஜபுவா: மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபுவாவில் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் பிரச்சார சுட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆண்கள், பெண்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வருமானம், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி , முதியவர்களுக்கு மருத்துவம் ஆகியவற்றை அளிப்பதே எங்களின் தாரக மந்திரம் என்றார். 55 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்த போது 1,500 பள்ளிகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தனது 15 ஆண்டு ஆட்சியில் 4,000 பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.  பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 14 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசால் 10 ஆண்டுகளாக செய்ய முடியாததை, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டில் செய்து முடித்துள்ளது.2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதே மத்திய அரசின் லட்சியம். 2022க்குள் நாட்டில் அனைவருக்கும் குடியிருப்புகள் வழங்குவதே எனது கனவு. இதுவரை 1.25 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. மாநில்ஙகளிலும் சரி மத்தியிலும் சரி மக்கள் நலன்கள் பற்றி சிந்திக்காத அரசாக தான் காங்கிரஸ் இருந்துள்ளது என்றார். நாட்டின் அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவுமே ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி பேசினார்.

மூலக்கதை