தேக்கம்!பனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி:கெஞ்சும் அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
தேக்கம்!பனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி:கெஞ்சும் அதிகாரிகள்

மதுரை:மதுரையில் பனையூர் கால்வாயில் சில இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் மாநகராட்சி கெஞ்சி வருவதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தேக்கமடைந்துள்ளது.இக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏ.வி., பாலம் முதல் வேலம்மாள் கல்லுாரி வரையுள்ள பனையூர் கால்வாயில் 198 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்தன. இவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இஸ்மாயில்புரம் அருகே வைகை கரைப்பகுதியில் உள்ள இக்கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கடந்த வாரம் மாநகராட்சி சென்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மறு அளவீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மீண்டும் அளவீடு செய்யும் பணி நடந்தது. ஆக்கிரமிப்பு பகுதிகள் மீண்டும் அடையாளப்படுத்தப்பட்டன. 70 சதவீதம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் கரைப்பகுதி மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்ய கெஞ்சுவதும், அவர்கள் மிரட்டியதும், பின்வாங்கி செல்வதும் என ஆக்கிரமிப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன.வைகை கரைப்பகுதி மற்றும் பனையூர் கால்வாய் பகுதிகள் சார்ந்த இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பணிகள் நடக்க உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை விட்டு வைத்தால் இங்கு திட்டப்பணிகளை மேற்கொள்வது சாத்தியமில்லாமல் போகும். மாநகராட்சி அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

மூலக்கதை