தெருவுக்கு தெரு மாநாடு நாய்கள் ஜாக்கிரதை! கடக்க மக்கள் பெரும்பாடு

தினமலர்  தினமலர்
தெருவுக்கு தெரு மாநாடு நாய்கள் ஜாக்கிரதை! கடக்க மக்கள் பெரும்பாடு

கோவை:'வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த, 18 மாத ஆண் குழந்தையை, தெரு நாய்கள் கடித்து குதறியதில், குழந்தை படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறது' - சில மாதங்களுக்கு முன், இப்படி ஒரு செய்தியை படித்ததும், அனைவரது உள்ளத்திலும் ஒருவித அச்ச உணர்வு வந்து போகாமல் இருந்திருக்காது.கோவையில் தெருநாய் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு பகுதியிலும், மாநாடு நடத்தும் அளவுக்கு, இவை பெருகி வருகின்றன.இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, மாநகராட்சி பின்பற்றி வந்த கருத்தடை திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் நடந்து செல்வோர், குலை நடுங்கியபடிதான் செல்ல வேண்டியிருக்கிறது.தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, நிறுத்தப்பட்டு இருப்பதே, இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம்.மாநகராட்சி வேடிக்கைநாய்களை பிடித்து சென்று, கருத்தடை செய்த பின், அவற்றை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்கிறது விதிமுறை. இதன்படி, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் மையங்கள், சீரநாயக்கன்பாளையம் மற்றும் உக்கடத்தில், கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டன.நாய்களை கொல்வதை எதிர்க்கும், 'ஹியூமன் பார் அனிமல் சொசைட்டி', 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' போன்ற அமைப்புகள், நாய்களை பிடித்து கருத்தடை செய்து, மீண்டும் வீதிகளில் விட்டு வந்தன.
இப்போது, மாநகராட்சி உட்பட எவரும் இவற்றை கண்டுகொள்வதில்லை.கருத்தடை செய்ய வழங்கப்படும் நிதி, எவ்வளவு என நிர்ணயிப்பதில் நீடிக்கும் இழுபறியே, இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என தெரியவந்துள்ளது.ஒரு நாய்க்கு ரூ.444!மாநகராட்சி சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார் கூறியதாவது:தெருநாய்க்கு கருத்தடை செய்ய, மாநகராட்சிதரப்பில், நாய் ஒன்றுக்கு 444 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 50 சதவீதம், பிராணிகள் நல அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.பிற ஊராட்சி பகுதியில், 700 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு, தொகையை உயர்த்தி வழங்க, வலியுறுத்தப்பட்டது.இதற்கான கருத்துரு, நகராட்சி நிர்வாக கமிஷனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்கடத்தில் செயல்பட்டு வந்த, தெருநாய்களுக்கான கருத்தடை மையம், அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுள்ளது. மாற்று இடம் தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் கருத்தடை மையம் செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, உயர்ந்து வரும் நிலையில், உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாய் துரத்தினால் தீர்வு கிடைக்கும்!காரில் பயணப்பட்டே பழகிப் போன, நம் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு, இதுவரை நாய்களால் துரத்தப்பட்ட அனுபவம் கிடைக்கவில்லை போலும். அப்படி ஒரு அனுபவம், இவர்களுக்கு வாய்க்கும்போதுதான், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு கிடைக்குமோ!

மூலக்கதை