செய்தி சில வரிகளில்

தினமலர்  தினமலர்
செய்தி சில வரிகளில்

டிரம்ப் உத்தரவுக்கு தடை

வாஷிங்டன்: மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைபவர்களை, எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம், டிரம்பின் உத்தரவுக்கு, நேற்று தடை விதித்தது.

மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள, மெர்சி மருத்துவமனையில், நேற்று முன்தினம் காலை, மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கி சூட்டில், பெண் டாக்டர் மற்றும் போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதனை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.
டிரம்புக்கு பாக்., கண்டனம்
இஸ்லாமாபாத்: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக பாக்., நாட்டுக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த, கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவியை அமெரிக்க அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அல் - குவைதா தலைவன் ஒசாமா பின் லேடனுக்கு தஞ்சம் அளித்ததால், நிதியுதவியை ரத்து செய்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்கம் அளித்தார். இதற்கு அமெரிக்க துாதரிடம், பாக்., அரசு, கண்டனம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு அமிதாப் உதவி
மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில், 350க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கடன்களை, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தினார். தற்போது, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த, 1,398 விவசாயிகளின், நான்கு கோடி ரூபாய் வங்கி கடன்களை செலுத்துவதாக கூறியுள்ளார்.
போர் கப்பல் தயாரிப்பு
புதுடில்லி: இந்திய கடற்படைக்காக, கோவா கடற்படை தளத்தில், ரஷ்ய தொழில்நுட்பத்திலான, இரண்டு புதிய போர்க் கப்பல்கள் கட்டுமானத்துக்கான, 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. போர் கப்பலுக்கான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை, ரஷ்யா வழங்கும்.

பாக்., ராணுவம் அத்துமீறல்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பூஞ்ச் - ரஜோரி மாவட்டங்களுக்கு இடையில், எல்லை பகுதியில், பாக்., ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள, பல பள்ளிகள் நேற்று மூடப்பட்டன.

மூலக்கதை