தெலங்கானாவில் 119 தொகுதிக்கு 3,400 பேர் வேட்புமனு தாக்கல்: ஆட்டம் காணும் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலங்கானாவில் 119 தொகுதிக்கு 3,400 பேர் வேட்புமனு தாக்கல்: ஆட்டம் காணும் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சி

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் 119 சட்டசபை தொகுதிக்காக 3,400 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் வெற்றிக்காக பல யாகங்களை நடத்தி வரும் முதல்வர் சந்திரசேகர ராவின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின் முதன்முறையாக, 119 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7ம் ேததி நடக்கிறது.

முன்னதாக கடந்த 12ம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் தொடங்கி, இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. வரும் 22ம் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி தலைவருமான சந்திரசேகர ராவ், தீவிர இறை நம்பிக்கை கொண்டவர். தெலங்கானா தனி மாநிலம் அமையவும், தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் சந்திரசேகர ராவ் ஏற்கெனவே யாகங்களை நடத்தி இருக்கிறார்.

இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, எம்ஐஎம் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் கட்சி தலைமையில் தெலுங்கு தேசம் உட்பட சில கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.

தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் இரண்டு அணியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சந்திரசேகரராவ் தனது சொந்த ஊரான எர்ரவள்ளியில் இருக்கும் அவரது எஸ்டேட்டில், தேர்தல் வெற்றிக்காக ராஜ சியாமள யாகத்தை நடத்தினார்.

விசாகா சாரதா பீடாதிபதி சொரூபா நந்தேந்திர சுவாமி தலைமையில் நடைபெற்ற யாகத்தில் 120க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று யாகம் நடத்தினர். அப்போது, மகா ருத்ர சகித சண்டி யாகம், சூரிய நமஸ்காரம், நவக்கிரக பாசுபதம், ருத்ராபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டன.

நேற்று யாகத்தின் நிறைவு நிகழ்ச்சியான பூர்ணாஹூதி நடைபெற்றது. யாகம் நிறைவடைந்த நிலையில் சந்திரசேகர ராவ் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை நேற்று முதல் தொடங்கினார்.

புதிய மாநிலம், புதிய முதல்வர் எனச் சரித்திரம் படைத்த சந்திரசேகர ராவ் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 65க்கும் கூடுதலான இடங்களை காங்கிரஸ் - தெலுங்குதேசம் கூட்டணியும், 40 இடங்கள் வரை சந்திரசேகர ராவும், இதரக் கட்சிகள் 10 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 119 தொகுதிகளுக்கும் 3,400 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜாட் குமார் கூறுகையில், ‘‘வரும் டிசம்பர் 7ம் தேதி தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது.

அதற்காக, 3,400 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பரிசீலனை முடிவுக்கு பின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்’’ என்றார்.

.

மூலக்கதை