கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும்: முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும்: முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்

திருவனந்தபுரம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவித்து உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை என்று பல பகுதிகளில் மக்கள் தங்களின் வீடு மற்றும் விவசாய நிலத்தை இழந்து, அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது புயல் பாதித்த பகுதிகளிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு கேரளா உதவிக் கரம் நீட்டியுள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரள மாநிலம் பக்கத் துணையாக இருக்கும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு குடிநீர், தார்ப்பாய், மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவுப் பொருட்கள், புத்தாடைகள் அனுப்பி வைக்கப்படும். கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தபோது தமிழக மக்கள் பெரும் திரளாக திரண்டு சென்று உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை