சட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில், 72 ெதாகுதிகளில் 2ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் இன்று ெதாடங்கியது. நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000ம் ஆண்டில் சட்டீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்டு, அந்த மாநில முதல் முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்  ஜோகி பதவியேற்றார்.

அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 3 ஆண்டுகள் வரையே நீடித்தது.   அடுத்து நடந்த மூன்று தேர்தல்களிலும் பாஜவே வெற்றி பெற்று, தொடர்ந்து 3  முறை முதல்வராக ரமண் சிங் பதவி வகித்தார். தற்போது 4வது முறையாக  முதல்வராக, அவர் தீவிர முனைப்பில் தேர்தலில் களம் கண்டுள்ளார்.

கடந்த தேர்தலில் பாஜ கட்சி 49 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 39 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது. மாநிலத்தில் பாஜ - காங்கிரஸ் என்ற இருமுனை போட்டியே இருந்த நிலையில்,

காங்கிரசில் இருந்து விலகி, ‘ஜனதா  காங்கிரஸ் சட்டீஸ்கர்’ என்ற தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன்,  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கைகோர்த்துள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதேபோல், 66 தொகுதிகளில்  ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 76. 28 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தொகுதிகளில், 1,53,85,983 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

இவர்களில் 77,46,628 பேர் ஆண்கள், 76,38,418 பேர் பெண்கள், 940 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இரண்டாம் கட்ட தேர்தலுக்காக 19,296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்காளர்கள் அச்சமில்லாமல் வாக்களிக்கவும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவும் மத்திய காவல் படையினர், மாநில  போலீசார் என, 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல் பாதிப்புள்ள ஜஷ்பூர், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்குப்பதிவு நடக்கும் 72 தொகுதிகளிலும் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மாநில அமைச்சர்கள் 10 பேர், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (மர்வாஹி தொகுதி), அவரது மனைவி ரேணு ஜோகி (கோண்டா தொகுதி), மருமகள் ரிச்சா ஜோகி (அகல்டாரா தொகுதி), காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரண்தாஸ் மஹந்த் (சக்தி தொகுதி), அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூபேஷ் பக்ஹெல் (படான் தொகுதி) உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வராக சரண்தாஸ் மஹந்த் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ரமண் சிங் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். முதல்கட்ட தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களில் குளறுபடி இருந்ததாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

ஆனால், அந்த வீடியோ போலியானது என்று தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று விளக்கமளித்தது.

.

மூலக்கதை