குறைந்த செலவு; அதிக விளைச்சல் இஸ்ரேல் வாழைக்கன்றுகளை அமேதிக்கு கொடுத்தார் ராகுல்

தினகரன்  தினகரன்
குறைந்த செலவு; அதிக விளைச்சல் இஸ்ரேல் வாழைக்கன்றுகளை அமேதிக்கு கொடுத்தார் ராகுல்

லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது அமேதி தொகுதி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிப்படி 40 ஆயிரம் இஸ்ரேல் வாழைக் கன்றுகளை அனுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது அமேதி மக்களவை தொகுதிக்கு கடந்த முறை சென்றபோது, அங்குள்ள விவசாயிகள் அவரை சந்தித்து பேசினர். அப்போது, அங்கு வாழை சாகுபடி செய்வது குறித்து ஆலோசித்தனர். அவரகளுக்கு குறைந்த செலவில் அதிக விளைச்சல் தரும் ரகமான இஸ்ரேலின் ஜி-9 ரக வாழைக்கன்றுகளை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார் ராகுல். இந்திரா காந்தியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அமேதி தொகுதிக்கு 40 ஆயிரம் வாழைக்கன்றுகளை ராகுல் நேற்று அனுப்பி வைத்தார். இதை விவசாயிகளுக்கு வழங்கும் பொறுப்பு கேதிகார் மஸ்தூர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் அனில் சுக்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமேதிக்கு இஸ்ரேல் வாழைக் கன்றுகளை அனுப்பி வைக்கும் திட்டம் டிச.9ல் சோனியா பிறந்தநாள் வரை தொடரும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அன்சு தெரிவித்தார். அமேதி தொகுதியில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை என பா.ஜ தலைவர்கள் குறை கூறி வருகின்றனர். இந்த தொகுதியில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இத்தொகுதிக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் இத்தொகுதி பெண்களுக்காக 10 ஆயிரம் சேலைகளை அனுப்பி வைத்தார். அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் வெற்றி பெறுவதில் ஸ்மிருதி இரானி தீவிரமாக உள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் அன்சு அவஸ்தி, ‘‘அமேதி தொகுதி மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டத்தை ஸ்மிருதி இராணி செய்திருக்கலாம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் செய்தது வேறு நோக்கத்தை காட்டுகிறது’’ என்றார்.

மூலக்கதை