'டிரம்ப்புக்கு மறதி நோய்' : பாக்., அமைச்சர் காட்டம்

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்,: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மறதி நோயால் அவதிப்படுவதாக, பாகிஸ்தான் அமைச்சர் கிண்டலடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்காவிடம் உறுதி அளித்த, பாக்., அது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அல் - குவைதா தலைவன், ஒசாமா பின் லாடன், பாக்.,கில் பதுங்கி இருந்தது, அந்நாட்டு அரசுக்கு தெரிந்தும், தகவல் கூறவில்லை. அமெரிக்காவுக்காக, பாக்., இதுவரை எதுவும் செய்ததில்லை. எனவே தான், அவர்களுக்கு வழங்கி வந்த, பல கோடி ரூபாய் ராணுவ நிதியை, அமெரிக்கா நிறுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்து தொடர்பாக, பாக்., மனித உரிமை துறை அமைச்சர், ஷிரீன் மசாரி கூறியதாவது:அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு பின், அமெரிக்காவின் சொல்படி எல்லாம் கேட்டு நடந்த, பாக்., தலைவர்களுக்கு, டிரம்ப்பின் கருத்து, நல்ல பாடமாக அமையட்டும்.அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த செய்யும் முயற்சிகள் எப்போதும், பலன் அளிக்காது என்பதை, வரலாறு மறுபடியும் நிரூபித்து உள்ளது.தனக்கு தேவையான நேரத்தில், தேவையான வரலாறுகளை, வசதியாக மறுந்துவிடக் கூடிய மறதி நோயால், டிரம்ப் அவதிப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை