எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு: சந்திரபாபுநாயுடு

தினமலர்  தினமலர்
எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு: சந்திரபாபுநாயுடு

கோல்கட்டா: நவ.22ல் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபுநாயுடு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் இது பின்னடைவாக கருதப்படுகிறது.

அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில் மத்தியில் ஆளும், பா.ஜ.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். நேற்று திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை, கோல்கட்டாவில் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

பின்னர் சந்திரபாபு கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் 22ல் நடப்பதாக இருந்தது. ஒருசில காரணங்களால் தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் பார்லி., குளிர் கால கூட்டத்தொடருக்கு முன் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை