நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் : ஓ.பி.ராவத் தகவல்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் : ஓ.பி.ராவத் தகவல்

புதுடெல்லி : நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதி, மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தொகுதியான திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனிடையே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்ற நிலையை எடுத்தனர். இதனால் இந்தத் தொகுதிகளுக்கும் சேர்த்து என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இதையடுத்து புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக, சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பின்போது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்பு தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான பிறகு தமிழகத்தின் இடைத்தேர்தல்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். புயல் எச்சரிக்கை காரணமாக தேர்தலை ஒத்தி வைத்ததை அரசியல் கட்சிகள் விமர்சித்தனர், ஆனால் தேர்தலை ஒத்திவைக்காமல் இருந்திருந்தால் புயலால் இடைத்தேர்தலுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தின் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை