சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிரான வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

தினகரன்  தினகரன்
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிரான வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி : சபரிமலை தொடர்பான வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நபர்கள் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளும் ஐனவரி 22ல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி பலமுறை முறையிட்டும், வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாறா முறையிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து வழக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 22ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனிடையே மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சென்று வருகிறார்கள். கோயிலுக்கு செல்ல முயலும் பெண்களை பக்தர்கள் தொடர்ந்து தடுத்தி நிறுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கோரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் கோரி தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை