ஏடிபி உலக டூர் பைனல்ஸ் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன் பட்டம் வென்றார் : ஜோகோவிச்சை வீழ்த்தினார்

தினகரன்  தினகரன்
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன் பட்டம் வென்றார் : ஜோகோவிச்சை வீழ்த்தினார்

லண்டன் : ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்திய இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் டாப் 8 வீரர்கள் மற்றும் ஜோடிகள் மோதிய இந்த தொடர் லண்டன் O2 அரங்கில் நடைபெற்றது. எட்டு வீரர்களும் இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதியதில் முதல் 2 இடங்களைப் பிடித்த வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறினர். முதல் அரை இறுதியில் ஜோகோவிச் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரவ் (3வது ரேங்க்) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில், சீசன் முடிவு சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் ஜோகோவிச் (31 வயது) - ஸ்வெரவ் (21 வயது) மோதினர். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், 6வது முறையாக கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்கிய ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஸ்வெரவ், தனது மின்னல் வேக சர்வீஸ்களால் ஜோகோவிச்சை திணறடித்தார்.முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்வெரவ், 2வது செட்டிலும் ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். லீக் சுற்றில் ஜோகோவிச்சிடம் தோற்றிருந்த ஸ்வெரவ், அரை இறுதியில் பெடரரை வீழ்த்தியதால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி முதல் முறையாக ஏடிபி பைனல்ஸ் தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.* ஒரு ஏடிபி பைனல்ஸ் தொடரில் நட்சத்திர வீரர்கள் பெடரர், ஜோகோவிச் இருவரையும் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமை ஸ்வெரவுக்கு கிடைத்துள்ளது.* 1990ம் ஆண்டுக்கு பிறகு (ஆந்த்ரே அகாசி), தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள வீரர்களை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் ஸ்வெரவ் வசப்படுத்தி உள்ளார்.* இந்த தொடரில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு (21 வயது, 6 மாதம்) கிடைத்துள்ளது. ஜோகோவிச் 2008ல் படைத்த சாதனையை ஸ்வெரவ் முறியடித்துள்ளார்.* 1995ல் போரிஸ் பெக்கர் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர், ஏடிபி உலக டூர் கோப்பையை கைப்பற்றிய முதல் ஜெர்மனி வீரரும் இவர்தான்.

மூலக்கதை