கோத்ரா கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டது சரியா? நவ.26ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை

தினகரன்  தினகரன்
கோத்ரா கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டது சரியா? நவ.26ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் நீக்கப்பட்டது சரியா? என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் குல்பர்கா குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஷான் ஜாபர் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கலவரத்தினால் ஏற்பட்ட படுகொலைக்கு எதிராக ஜாபரின் மனைவி ஜக்கியா ஜாபர் வழக்கு பதிவு செய்தார். அதில், “கோத்ரா கலவரத்தில் குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் முக்கிய காரணம். அதற்கு அரசு அதிகாரிகளும் முழு உடந்தையாக இருந்துள்ளனர்’’ என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது புகார் பட்டியலில் மோடி உட்பட 58 பேரின் பெயர்கள் இணைக்கப்பட்டது.இதையடுத்து வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) தொடர்ந்து விசாரித்து வந்தது. ஆனால் மேற்கண்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தக்க ஆதாரங்கள் இல்லை என்று கூறி நரேந்திர மோடி உட்பட அனைவரின் பெயரையும் வழக்கில் இருந்து நீக்கி விடுதலை செய்தது. இதையடுத்து மேற்கண்ட விடுதலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் நீக்கப்பட்டது சரியா? என ஜக்கியா ஜாபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், ‘‘கோத்ரா வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் நீக்கப்பட்டது சரியா என்பது பற்றி வரும் 26ம் தேதியன்று விசாரணை நடத்தப்படும்’’ என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை