கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் போலீஸ் தீவிரம் சபரிமலையில் விடிய விடிய போராட்டம் : 69 பக்தர்கள் சிறையில் அடைப்பு

தினகரன்  தினகரன்
கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் போலீஸ் தீவிரம் சபரிமலையில் விடிய விடிய போராட்டம் : 69 பக்தர்கள் சிறையில் அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு தங்கி இருந்த பக்தர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 69 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகள் தொடர்ந்து வருகிறது. பம்பையில் இருந்து இரவு 9 மணிக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இரவு கோயில் நடை சாத்தப்பட்ட பின்னர் யாரையும் சன்னிதானத்தில் தங்க போலீசார் அனுமதிக்கவில்லை. நெய் அபிஷேகம் செய்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வருடம் நடைதிறந்த 3 நாளில் 3.29 லட்சம் பக்தர்கள் சபரிமலை வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் இதுவரை 1.23 லட்சம் பக்தர்களே வந்துள்ளனர். இதனால் கோயில் வருமானமும் குறைந்துள்ளது. கடந்த வருடம் முதல் 3 நாளில் ரூ.8.97 கோடி கிடைத்தது. ஆனால் இந்த வருடம் ரூ.4.8 கோடி வருமானம் மட்டுமே கிடைத்துள்ளது.நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சன்னிதானம், மாளிகைபுரம் பகுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பக்தர்களை ேபாலீசார் பம்பைக்கு திரும்புமாறு கூறினர். ஆனால் நெய்யபிஷேகத்துக்கு டிக்கெட் எடுத்திருப்பதாகவும் நெய் அபிஷேகம் முடிந்த பின் செல்வோம் என்றும் அவர்கள் கூறினர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் ஊர்வலமாக பெரியநடைபந்தல் பகுதிக்கு சென்று தரையில் அமர்ந்து நாம ஜெப ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். சன்னிதானத்தில் 144 தடை உள்ளதால் கலைந்து செல்ல எஸ்பி பிரதீஷ்குமார் வலியுறுத்தினார்.  இந்த நிலையில் திடீரென ஒரு பக்தரை போலீசார் கைது செய்ய முயன்றனர். பக்தர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் 2 மணி நேரத்துக்கு மேல் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திரண்டிருந்த 69 பக்தர்களை போலீசார் கைது செய்து மணியார் ஆயுதப்படை முகாம் கொண்டு சென்றனர். இதுகுறித்து அறிந்ததும் கேரளாவின் பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் முன்பும் பக்தர்களை வைத்திருந்த ஆயுதப்படை முகாம் முன்பும் நள்ளிரவு பக்தர்கள் நாம ஜெப போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரத்தில் முதல்வர் வீடு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது. . சபரிமலையில் கைது செய்யப்பட்ட 69 பேரும் நேற்று பத்தனம்திட்டா முன்சீப் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக சன்னிதானம் ஐஜி விஜய் சார்க்கரே விளக்கம் அளிக்க டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டுள்ளார். சபரிமலையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்புக்கு மத்திய போலீசை வரவழைப்பது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், சபரி மலை தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சன்னிதானத்தில் போலீசார் காட்டும் கெடுபிடிகள் சரியானதாக தெரியவில்லை, எதற்காக சபரிமலையில் 15,000 போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர் என மாநில அரசிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.மத்திய அமைச்சர் ஆய்வுமத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் நேற்று சபரிமலையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் கேரள அரசு எந்த வசதியும் செய்யவில்லை. பக்தர்களிடம் கேரள அரசும், போலீசும் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. சபரிமலையை கேரள அரசு போர்க்களம் ஆக்கிவிட்டது. பக்தர்களை போலீசார் கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.பாதுகாப்பு கேட்டு பெண்கள் மனுகண்ணூரை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், சனிலா, கொல்லத்தை சேர்ந்த தன்யா ஆகியோர் கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை செல்ல நாங்கள்  மாலையிட்டு விரதம் இருந்து வருகிறோம். ஐயப்பனை தரிசிக்கும் வரை மாலையை கழற்றமாட்டோம். எங்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டும். என்றனர். இவர்கள் சபரிமலை செல்ல விரும்பினால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரள தேசவம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர்கள் இன்று விசிட்எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்களை போலீசார் கொடுமைப்படுத்துகின்றனர். தடை உத்தரவை மீறி செவ்வாய் கிழமை (இன்று) நான், உம்மன்சாண்டி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் பென்னி பெகனன் ஆகியோர் சபரிமலை செல்ல உள்ளோம். என்று கூறினார்.

மூலக்கதை