பட்டேலை விட சிவாஜி சிலை உயரமாக இருக்கக்கூடாதா? மோடி, அமித்ஷா மிரட்டல்களுக்கு முதல்வர் பட்நவிஸ் பயப்படக்கூடாது

தினகரன்  தினகரன்
பட்டேலை விட சிவாஜி சிலை உயரமாக இருக்கக்கூடாதா? மோடி, அமித்ஷா மிரட்டல்களுக்கு முதல்வர் பட்நவிஸ் பயப்படக்கூடாது

மும்பை : இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 182 மீட்டர் உயரமுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 31ம் தேதி திறந்து வைத்தார். ஆனால், மகாராஷ்டிரா அரசு சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு மும்பை அருகே அரபிக்கடலில் 212 மீட்டர் உயரத்தில் சிலை வைக்க முடிவு செய்திருந்தது. இதன் மூலம் உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமை சிவாஜி சிலைக்கு கிடைக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் சிவாஜியின் சிலை உயரத்தை செலவை காரணம் காட்டி குறைக்க மகாராஷ்டிராவில் உள்ள பாஜ தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. முன்பு திட்டமிட்டதைவிட 20 மீட்டர் உயரத்தை குறைக்கவும், இதன் மூலம் 340 கோடியை மிச்சப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உலகிலேயே உயரமான சிலையாக வீரசிவாஜி சிலை அமைக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு மராத்தியர்களும் விரும்புகின்றனர். ஆனால் வீரசிவாஜியின் சிலை உயரத்தை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை பார்த்து பயப்படுவதை பட்நவிஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும். மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு அளித்த அதே துணிச்சலை இந்த விவகாரத்திலும் பட்நவிஸ் காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை