திருவான்மியூரில் ரூ.15 கோடி மதிப்பு அரசு இடம்.. ஆக்கிரமிப்பு! தடுக்க சென்ற அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்

தினமலர்  தினமலர்
திருவான்மியூரில் ரூ.15 கோடி மதிப்பு அரசு இடம்.. ஆக்கிரமிப்பு! தடுக்க சென்ற அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்

திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசு இடத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டி விற்க முயற்சி நடக்கிறது. நீர்நிலையான அந்த இடத்தை மீட்க, வருவாய்த் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கட்டட பணியை தடுக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அடையாறு மண்டலம், 181வது வார்டு, திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில், பிள்ளையார் கோவில் தெருவில், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. மாநகராட்சியின், 3,000 சதுர அடி பரப்பளவு இடத்தில், கழிப்பறை இருந்தது. மிகவும் சேதமடைந்த கழிப்பறை, 2014ல் இடிக்கப்பட்டது. அப்போது, அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டடம் கட்ட முயற்சி செய்தனர்.

நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, ஆக்கிரமிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. அதே இடத்தை ஆய்வு செய்த, அப்போதைய, மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர், சுற்றி வேலி அமைத்து, நுாலகம் கட்ட உத்தரவிட்டார்.சுற்றி வேலி அமைக்கப்பட்டது. துணை ஆணையர் பணியிட மாற்றத்தில் சென்றதால், நுாலகம் அமைக்க வேண்டிய கோப்புகளை, கீழ் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில், இரு மாதத்திற்கு முன், மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடந்தது. நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டது.இந்த இடத்தை ஒட்டி, 6,000 சதுர அடி பரப்பளவில், வருவாய்த் துறைக்கு சொந்தமான நீர்த்தேக்க குட்டை உள்ளது. இதன் மதிப்பு, 15 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.அதில், அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் சேர்ந்து, வீடு கட்டி வருகின்றனர். கட்டும் வீட்டை, விற்பனை செய்யவும் முயற்சி நடக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் ஆசியுடன், கட்டுமான பணி நடப்பதாக, பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி, நீர்நிலையை மீட்க, மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மாநகராட்சி இடத்தை, ஆக்கிரமிக்க சிலர் முயன்றனர். 'தினமலர்' செய்தியால், இடம் தப்பியது. அருகில் உள்ள நீர்த்தேக்க குட்டையில், வீடு கட்டி பல கோடி ரூபாய்க்கு விற்க, சிலர் முயற்சி செய்கின்றனர். இரவு நேரத்தில் கட்டுமான பணி நடக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயன் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்நிலையில் கட்டடம் கட்ட, மாநகராட்சி எப்படி அனுமதி வழங்கியது என்று தெரியவில்லை.

பகுதிவாசிகள்நான் பதவி ஏற்று, இரு வாரம் ஆகிறது. வருவாய் ஆய்வாளரிடம், இடத்தை ஆய்வு செய்து அறிக்கை கேட்டுள்ளேன். நீர்த்தேக்க குட்டையில், வீடு கட்டி இருந்தால், இடித்துவிட்டு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜ்குமார் தாசில்தார், வேளச்சேரிகட்டடம் கட்ட அனுமதி வழங்கவில்லை.

'நோட்டீஸ்' வழங்கி தடுத்து நிறுத்தினால், இரவில் பணி செய்கின்றனர். தடுக்க செல்லும் போது, அரசியல்வாதிகளால் மிரட்டலுக்கும் ஆளாகிறோம். வருவாய்த் துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். அவர்கள் தான், ஆக்கிரமிப்பை எடுக்க வேண்டும். நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

-மாநகராட்சி அதிகாரிகள்
- நமது நிருபர் -

மூலக்கதை