ஜனவரி 19-ல் பாஜக எதிர்ப்பு அணியின் சார்பில் பொதுக்கூட்டம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

தினகரன்  தினகரன்
ஜனவரி 19ல் பாஜக எதிர்ப்பு அணியின் சார்பில் பொதுக்கூட்டம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா: நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி நிறுவன தலைவர் முலாயம் சிங்  ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ஜனவரி 19-ம் தேதி பாஜக எதிர்ப்பு அணியின் சார்பில் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்பு அடுத்தக்கட்ட திட்டம் பற்றி விவாதிக்கப்படும் என்றும் கூறினார். சந்திரபாபு நாயுடு பேட்டி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பு ஒத்த கருத்து உள்ள கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது  என்றும் கூறினார். பாஜக எதிர்ப்பு கூட்டணியின் தலைவராக யார் இருப்பார்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, தமது அணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை விட மூத்தவர்கள் என்று தெரிவித்தார்.

மூலக்கதை