ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்பு: சொல்கிறார் ரவி சாஸ்திரி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்பு: சொல்கிறார் ரவி சாஸ்திரி

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு டி-20, டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. முதல் டி-20 போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.

வெற்றிபெறும் முனைப்புடன், இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.   இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிரிஸ்பேன் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி மட்டும்தான் தோல்வி அடைவது போன்று விமர்சிக்கப்படுகிறது.

இந்திய அணி மட்டும்தான் வெளிநாடுகளில் தோல்விகளை சந்தித்ததா? தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் கூட வெளிநாடுகளில் தோல்விகளை சந்தித்துள்ளன.

தற்போதைய சூழலில் பெரும்பாலான அணிகள் வெளிநாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. சில போட்டிகளில் இந்திய அணி போராடி தான் தோற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி பலவீனமான அணி கிடையாது. சொந்த மண்ணில் விளையாடும் அனைத்து அணிகளும் வலிமையானவை.

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. எனவே, இந்த சுற்றுப்பயணத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நிலைத்தன்மையுடன் பந்து வீசுவது அவசியம். அதற்கான வாய்ப்பாக இந்த தொடர் அமைந்துள்ளது.

காயமடைந்துள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாதது ஏமாற்றமே. அவர் பங்கேற்றிருந்தால் பேட்ஸ்மேன், கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் கிடைத்திருப்பார்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

.

மூலக்கதை