போர்களமானது சபரிமலை விடிய விடிய போராட்டம்: 200 பக்தர்கள் அதிரடி கைது: மத்திய படையை அழைக்க முடிவு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
போர்களமானது சபரிமலை விடிய விடிய போராட்டம்: 200 பக்தர்கள் அதிரடி கைது: மத்திய படையை அழைக்க முடிவு?

திருவனந்தபுரம்,: சபரிமலை சன்னிதானத்தில் நேற்று இரவு தங்கி இருந்த பக்தர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்ததையடுத்து 18ம் படி அருகே 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர். சபரிமலையில் போலீசாரின் கெடுபிடி 3வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கும், சன்னிதானத்தில் தங்குவதற்கும் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பம்பையில் இருந்து இரவு 9 மணிக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

அதிகாலை 2 மணிக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் யாரும் சன்னிதானத்தில் தங்க கூடாது என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

நெய் அபிஷேகம் செய்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் சபரிமலையில் வழக்கத்தைவிட மிகவும் குறைவான கூட்டமே காணப்பட்டது.

இதன் மூலம் சபரிமலை கோயில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது.

கடந்த வருடம் நடைதிறந்த 3 நாளில் 3. 29 லட்சம் பக்தர்கள் சபரிலை வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் இதுவரை 1. 23 லட்சம் பக்தர்களே வந்துள்ளனர்.

இதனால் கோயில் வருமானமும் பாதியாக குறைந்துள்ளது. கடந்த வருடம் முதல் 3 நாளில் ரூ. 8. 97 கோடி கிடைத்தது.

ஆனால் இந்த வருடம் ரூ. 4. 8 கோடி வருமானம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10. 30 மணியளவில் சன்னிதானம் மாளிகைபுரம் பகுதியில் சில பக்தர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ேபாலீசார் பம்பைக்கு திரும்பி செல்ல கூறினர். ஆனால் நெய் அபிஷேகத்துக்கு டிக்கெட் எடுத்திருப்பதாகவும் நாளை நெய் அபிஷேகம் முடிந்த பின்னரே செல்வோம் என்றும் அவர்கள் கூறினர்.

இருப்பினும் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தனர். இதையடுத்து அவர்கள் கோஷமிட்டனர்.

சத்தம் கேட்டு அங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக 18ம் படி அருகே உள்ள பெரியநடைபந்தல் பகுதிக்கு சென்று தரையில் அமர்ந்து நாம ஜெப ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்்டம் அதிகரிக்க தொடங்கியது.

இதையடுத்து எஸ். பி.

பிரதீஷ்குமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சன்னிதானத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என எஸ்பி கூறினார்.

ஆனால் அவர்கள், நாமஜெப கோஷம் மட்டுமே எழுப்புவதாகவும், அங்கிருந்து செல்ல முடியாது என்றும் கூறினர். இதற்கிடையே 11 மணியளவில் அரிவராசனம் பாடல் ஒலிபரப்பானது.

இதையடுத்து அரிவராசனம் முடிந்த பின்னர் கலைந்து செல்வதாக அவர்கள் கூறினர். அதற்கு போலீசார் சம்மதித்தனர்.

இந்த நிலையில் திடீெரன போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ் என்ற பக்தரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதையடுத்து பக்தர்கள் அனைவரும் அவரை கைது செய்யவிடாமல் பாதுகாத்தனர்.

இதனால் 2 மணி நேரத்துக்கு மேல் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திரண்டு இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்களை போலீசார் கைது செய்து பம்பைக்கு கொண்டு சென்றனர்.



பின்னர் இவர்கள் மணியார் ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் சன்னிதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அறிந்ததும் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்பட கேரளாவின் பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் முன் நள்ளிரவிலேயே பக்தர்கள் திரண்டு நாம ஜெப போராட்டம் நடத்தினர். விடியவிடிய இந்த ேபாராட்டம் நடந்தது.

கைது செய்யப்பட்ட பக்தர்கள் வைக்கப்பட்டுள்ள மணியார் ஆயுதப்படை முகாம் முன்பும் நாமஜெப ேபாராட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் கேரளா முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

பக்தர்கள் கைது செய்யப்பட்டது குறித்து எஸ்பி பிரதீஷ்குமார் கூறியது: சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே 3 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என கூறி இருந்தோம்.

இதை மீறி போராட்டம் நடத்தியதால் அவர்களை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சட்டப்படியே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரிவராசனம் முடிந்த உடன் திரும்பி சென்றுவிடுவோம் என அவர்கள் கூறினர். ஆனால் யாரும் திரும்பி செல்லாததால் சட்டப்படி நடவடிக்கை எடுத்தோம்.



இவ்வாறு அவர் கூறினார். மத்திய அமைச்சர் இந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இந்து ஐக்கிய வேதி பொது செயலாளர் சசிகலா இன்று சபரிமலை சென்றார்.

தரிசனம் முடிந்த உடன் உடனடியாக பம்பைக்கு திரும்பி விட வேண்டும் என போலீசார் அவருக்கு கட்டுப்பாடுகள் விதித்தனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் இன்று சபரிமலை செல்ல உள்ளார்.

பக்தர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், வசதிகள் ஒன்றும் செய்து தரப்படவில்லை என்றும் புகார்கள் கூறியதையடுத்து நேரில் பார்வையிட அவர் சபரிமலை செல்வதாக கூறப்படுகிறது. மத்திய படையை அழைக்க முடிவு? சபரிமலையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்புககு மத்திய போலீசை வரவழைக்கலாமா என்று கேரள அரசு ஆலோசித்து வருகிறது.

இதன்மூலம் பாஜவின் போராட்டத்தை ஒடுக்கலாம் என அரசு கருதுகிறது. மத்திய போலீஸ் வசம் பாதுகாப்பை ஒப்படைத்தால், பாஜவினர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதுபோல் ஆகிவிடும்.

எனவே அவர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என அரசு கருதுகிறது. உச்சநீதிமன்றத்தில் காலஅவகாசம் கோரி இன்று தேவசம்ேபார்டு சார்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் வரும் தீர்ப்பை பொறுத்து மத்திய போலீஸ் படை உதவியை நாடுவது என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வருடன் கவர்னர் ஆலோசனை
சபரிமலை கர்ம சமிதி ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியது, சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து கவர்னர் சதாசிவத்தை சந்தித்து முறையிட்டோம்.

இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுடன் இன்று பேசுவதாக கவர்னர் சதாசிவம் எங்களிடம் உறுதி அளித்தார். மேலும் அவர் சபரிமலை செல்ல விரும்புவதாகவும் எங்களிடம் கூறினார் என்றார்.


.

மூலக்கதை