மீண்டு(ம்) வருவாரா அசோக் கெலாட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீண்டு(ம்) வருவாரா அசோக் கெலாட்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
தேன்கூட்டால் அச்சம்
ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜவுக்கு இத்தேர்தலில் காங்கிரஸ் சவாலாக விளங்கி வருகிறது.

கடும் போட்டி நிலவும் நிலையில், பாஜவை காட்டிலும் காங்கிரசுக்கு சற்று செல்வாக்கு அதிகமாக உள்ளது. எனினும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பாஜ தீவிரமாக களமிறங்கியுள்ளது.

ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டி வருகிறது. ராஜஸ்தானில் தேர்தலை எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பலோனி பகுதியில், வாக்குச்சாவடி அமையவுள்ள இடத்தின் அருகயுள்ள வீட்டில் பெரிய அளவிலான தேன்கூடு உள்ளது. வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தேன்கூட்டை கலைக்குமாறு உரிமையாளருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

தன்னால் முடியாது என வீட்டின் உரிமையாளர் சொல்லிவிடவே தேன் கூட்டை கலைக்க தேர்தல் அதிகாரிகள் ஆள்தேடி வருகின்றனர்.     

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வரும் மத்திய பிரதேசத்தில், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை சுட்டிக்காடி காங்கிரசார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவதால் பாஜவுக்கு மாற்றான ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் கருதுகின்றனர். இதனால் பாஜ இங்கு சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜ அளித்துள்ளது.

ஏழைகளுக்கு இலவச கல்வி, பிளஸ்டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி, விவசாயிகளுக்கு ரூ. 40,000 கோடி கடன், 10 லட்சம் வேலைவாய்ப்புகள், புதிய பல்கலைக்கழகங்களை தொடங்குவது, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.      

மதுப்பிரியர்கள் குஷி
எளிதில் வெற்றிபெற்று விடாலம் என கருதி, தேர்தலை முன்கூட்டியே சந்தித்து வரும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தற்போது கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளார். டிசம்பர் 7ல் தேர்தல் நடைபெறும் இம்மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணி, பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்சி பணியில் ஈடுபடும் மதுபான பிரியர்களுக்கு அரசியல் கட்சியினர் கோடிக்கணக்கில் செலவழிக்கின்றனர்.

தேவையான அளவுக்கு மதுபானம் கிடைப்பதால் மதுப்பிரியர்கள் குஷியடைந்துள்ளனர். இதேபோல் வாக்காளர்களை கவர பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் ரூ. 83 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



விவசாய கடன் உடனடியாக ரத்து
முதல்வர் ராமன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கரில், பாஜவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள 18 தொகுதிகளில் கடந்த 12ல் முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

நாளை 2ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இறுதிகட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கரில் ஏழைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை மக்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என பேசினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் வாக்குறுதி அளித்தார்.     

இரு தொகுதிகளில் போட்டி
மிசோரமில் ஆட்சியில் உள்ள காங்கிரசை வீழ்த்த பாஜ பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 28ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனல் பறக்கு பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

செல்வாக்கில்லாத வடகிழக்கு மாநிலங்களில் பாஜ கால்பதித்து தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில், மிசோரமிலும் ஆட்சியமைக்க பாஜ முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், மிசோரமில் ஒரு வேட்பளரே 2 தொகுதிகளில் போட்டியிடுவது அதிகரித்துள்ளது. போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இவ்வாறு போட்டியிடுகின்றனர்.


.

மூலக்கதை