நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் பாகிஸ்தானுக்கு 176 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் பாகிஸ்தானுக்கு 176 ரன் இலக்கு

அபு தாபி: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு 176 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 63 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 227 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பாபர் ஆஸம் 62, ஆசாத் ஷபிக் 43, ஹரிஸ் சோகைல் 38, அசார் அலி 22, ஹபீஸ் 20 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் 4, கிராண்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட், வேக்னர், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 74 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 100.4 ஓவரில் 249 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ராவல் 46, வில்லியம்சன் 37, டெய்லர் 19, நிகோல்ஸ் 55, வாட்லிங் 59, சோதி 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அஜாஸ் பட்டேல் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹசன் அலி, யாசிர் ஷா தலா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.இதையடுத்து, 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 25, முகமது ஹபீஸ் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 10 விக்கெட் இருக்க இன்னும் 139 ரன் மட்டுமே தேவைப்படுவதால் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை