அமெரிக்காவுடன் வர்த்தக மோதல் ஆசிய-பசிபிக் மாநாட்டில் சீனா குடுமிப்பிடி சண்டை: முதல் முறையாக கூட்டறிக்கை வெளியிடாமல் கூட்டம் நிறைவு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவுடன் வர்த்தக மோதல் ஆசியபசிபிக் மாநாட்டில் சீனா குடுமிப்பிடி சண்டை: முதல் முறையாக கூட்டறிக்கை வெளியிடாமல் கூட்டம் நிறைவு

போர்ட் மோரஸ்பி: அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்ட மோதலால், ஆசிய பசிபிக் மாநாட்டில் வரலாற்றில் முதல் முறையாக மாநாட்டு அறிக்கை வெளியிடப்படாமலேயே கூட்டம் நிறைவடைந்தது. அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு பல லட்சம் கோடி வரியை உயர்த்தி மிரட்டி வருகின்றன. இது, உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆசிய - பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு முதல் முறையாக தென்மேற்கு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியாவின் தலைநகர் போர்ட் மோரஸ்பியில் நடந்தது. இக்கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட 21 உறுப்பு நாடுகள் பங்கேற்றன. 2 நாள் நடந்த இக்கூட்டம், அமெரிக்கா-சீனா இடையே நிலவும் கசப்பான சூழலை மாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால்,நேர்மாறான விளைவை ஏற்படுத்தி உள்ளது. சீனா நிதி உதவியுடன் பப்புவா நியூ கினியாவில் கட்டப்பட்டுள்ள  சாலைத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் முன்பாகவே சீன அதிபர் ஜின்பிங் போர்ட் மோரஸ்பிக்கு வந்துவிட்டார். இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் ஆசிய-பசிபிக் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்தனர். டிரம்ப்புக்கு பதிலாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், புடினுக்கு பதிலாக அந்நாட்டின் பிரதமர் மெட்விடேவும் பங்கேற்றனர். மாநாட்டின் முதல் நாளான நேற்று முன்தினம் பேசிய பென்ஸ், பட்டுப்பாதை பொருளாதார சாலை திட்டம் மூலம் ஏழை நாடுகளுக்கு கடனுதவி, நிதி உதவி செய்து சீனா தூண்டக்கூடாது என கண்டனம் தெரிவித்தார். முன்னதாக பேசிய சீன அதிபர் ஜின்பிங், சீனா செய்யும் உதவிகள் மற்ற நாடுகளுக்கு வைக்கும் பொறியல்ல என்றும், இதில் மறைமுக ஒப்பந்தங்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், வர்த்தக பாதுகாப்பில் அமெரிக்காவே முதன்மையானது என கூறிக் கொள்வது குறுகிய பார்வை என்றும் அது தோல்வியில் முடியும் என்றும் பேசினார். இந்த பேச்சுகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தலைமை பொறுப்பை ஏற்பது அமெரிக்காவா, சீனாவா என்பது போன்ற புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மாநாட்டில் உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த கருத்துகள் ஏதும் ஏற்படவில்லை. எனவே, வரலாற்றில் முதல் முறையாக மாநாட்டு அறிக்கை வெளியிடப்படாமலேயே கூட்டம் நிறைவடைந்தது. அமெரிக்கா-சீனாவின் மோதல், ஆசிய-பசிபிக் கூட்டமைப்பு நாடுகள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தி உள்ளது.அத்துமீறிய சீன அதிகாரிகள்ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டின் வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள், பப்புவா நியூ கினியா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், அமெரிக்கா -சீனா இடையே ஏற்பட்ட மோதலால் இந்த அறிக்கையை வெளியிடுவதில் உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில், அறிக்கையை வெளியிட வலியுறுத்துவதற்காக சீன வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் 3 பேர் அத்துமீறி அலுவலகத்தில் நுழைய முயற்சித்தனர். அவர்களை தடுத்த பப்புவா நியூகினியா அதிகாரிகள், உடனடியாக போலீசாரை அழைத்தனர். அமைச்சக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சீன அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரமும் மாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஓட்டல்கள் இல்லாததால் சொகுசு கப்பலில் தங்கினர்ஏழை நாடான பப்புவா நியூ கினியாவில் நடக்கும் முதல் மிகப்பெரிய சர்வதேச மாநாடு இதுதான். இந்த மாநாட்டை நடத்தவே ஆஸ்திரேலியாதான் நிதி உதவி அளித்துள்ளது. உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தங்கும் அளவிற்கு பப்புவா நியூகினியாவில் ஓட்டல்கள் கூட இல்லை. இதனால், தலைவர்களும், அதிகாரிகளும் சொகுசு கப்பல்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பது வழக்கமானது என்பதால், தலைநகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு முக்கிய சாலைகள், தெருக்கள் ஆகியவை 2 நாட்களுக்கு முடக்கப்பட்டிருந்தன.

மூலக்கதை