பாஜ பொது செயலாளர் சிறையில் அடைப்பு: கேரளாவில் இன்று சாலை மறியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ பொது செயலாளர் சிறையில் அடைப்பு: கேரளாவில் இன்று சாலை மறியல்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற பாஜ பொது செயலாளர் சுரேந்திரனை போலீசார் கைது செய்து 14 நாள் சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து இன்று கேரளா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாஜவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சபரிமலையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இளம் பெண்கள் வருகையை கண்டித்து பாஜ. இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் சபரிமலை முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 8. 30 மணியளவில் பாஜ பொது செயலாளர் சுரேந்திரன் இருமுடி கட்டுடன் சபரிமலை வந்தார்.

நிலக்கல்லில் வைத்து எஸ்பி யதிஷ்சந்திரா தலைமையில் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். சபரிமலைக்கு செல்லக்கூடாது என அவரிடம் கூறினர்.

ஆனால் இருமுடி கட்டுடன் வந்துள்ளதால் தரிசனத்துக்கு சென்றே தீருவேன் என அவர் கூறினார். தொடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாக கூறி போலீசார் அவரை கைது செய்து சிற்றார் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இது குறித்து அறிந்த பாஜவினர் காவல் நிலையம் முன் திரண்டு நாமஜெப போராட்டம் நடத்தினர்.

மேலும் தலைமை செயலகம் முன்பும் நூற்றுக்கணக்கான பாஜவினர் போராட்டம் நடத்தினர். தலைமை செயலகத்தில் தடுப்பு சுவரை தாண்டி உள்ளே நுழைய முயன்றனர்.



போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை கலைத்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக சென்ற பஸ்சை சிறைபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.


இதற்கிடையே போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் சுரேந்திரனை பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு ெசன்றனர். நேரம் செல்ல செல்ல பாஜவினரின் போராட்டம் அதிகரித்ததால் காலை 6 மணிக்கு பத்தனம் திட்டா மாஜிஸ்திரேட் வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட் அவரை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் கொட்டாரக்கரை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே சுரேந்திரன் கைதை கண்டித்து பாஜவினர் இன்று கேரளா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில்  சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இளம்பெண்ணை தடுத்த பாஜ
சபரிமலை செல்வதற்காக கண்ணூரை சேர்ந்த இளம் பெண் ரேஷ்மா மாலை அணிந்திருந்தார்.

இந்த மண்டல காலத்தில் சபரிமலை செல்வதாக அவர் கூறியிருந்தார். இதன்படி நேற்று மாலை கண்ணூர் இரிணாவ் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பாஜவினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் அவர் புறப்பட்டு கண்ணபுரம் ரயில் நிலையத்துக்கு சென்றார்.

ரயில் நிலையத்திலும் பாஜ தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர் சபரிமலை செல்ல முடியாமல் வீட்டுக்கே திரும்பி சென்றார்.

.

மூலக்கதை