தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும்: மத்தியமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதி

தினகரன்  தினகரன்
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும்: மத்தியமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதி

டெல்லி: கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டு அறிந்தார்.  கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. 59 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜே.பி.நட்டா பேசினார். அப்போது, கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து கேட்டறிந்தார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் ஜே.பி.நட்டா உறுதி அளித்தார்.இதற்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டியில், கஜா புயலினால் இதுவரை 2 சிறுவர்கள் உள்பட 33 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 70 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 1296 கோழி இறந்துள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணியில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. 105 துணைமின்நிலையங்கள், 30 ஆயிரம் மின்கம்பங்கள் சரிந்து, முறிந்து விழுந்துள்ளன என்றார். நாளை(இன்று) நான் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் இன்று நாகை செல்ல விருந்த முதல்வர் பழனிசாமியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை