சந்திரபாபுவை தொடர்ந்து மம்தாவும் போர்க்கொடி சிபிஐ நுழைய அதிரடி தடை: மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
சந்திரபாபுவை தொடர்ந்து மம்தாவும் போர்க்கொடி சிபிஐ நுழைய அதிரடி தடை: மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையால் பரபரப்பு

* தங்கள் மாநிலங்களில் தடையின்றி விசாரணையை மேற்கொள்ள சிபிஐ.க்கு இதுவரை 10 மாநிலங்கள் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளன.* பாஜ ஆளும் சில மாநிலங்களும் கூட, சிபிஐ.க்கு அனுமதி வழங்கவில்லை.* சிபிஐ.க்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்வது பற்றி பாஜ அல்லாத அனைத்து மாநிலங்களும் பரிசீலனை.* மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே அதிகார மோதல் ஏற்படும் அபாயம்.* எதிர்க்கட்சி ஆளும் மற்ற மாநிலங்களும் பரிசீலனைபுதுடெல்லி: தனது மாநிலத்துக்குள் சிபிஐ நுழைய ஆந்திர அரசு தடை விதித்துள்ளதை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் சிபிஐ.க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். சிபிஐ.க்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கையை எடுப்பது பற்றி பாஜ அல்லாத மற்ற மாநிலங்களின் அரசுகளும் தீவிரமாக பரிசீலனை செய்து வருகின்றன. மத்திய அரசுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததால், பாஜ தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கடந்த மார்ச் மாதம் விலகியது. ‘அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக சிபிஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது’ என சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். தெலுங்கு தேசம் கட்சிக்கு நெருக்கமான சிலரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையும், சிபிஐ.யும் சமீபத்தில் சோதனை நடத்தின. இது, அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், ‘ஆந்திராவில் இனிமேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்போது ஆந்திர போலீஸ் பாதுகாப்பு அளிக்காது’ என அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், சிபிஐ.க்கு எதிராகவும் இப்போது அவர் பாய்ந்துள்ளார். தனது மாநிலத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்காக வழங்கி இருந்த பொது அனுமதியை ஆந்திர அரசு கடந்த 8ம் தேதி அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த ரகசிய தகவல் நேற்று முன்தினம்தான் வெளியானது. மேலும், சிபிஐ.க்கு அனுமதி அளிக்கும் அரசாணையை ரத்து செய்து, ஆந்திர அரசு புதிய அரசாணையையும் பிறப்பித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கை, தேசிய அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவருடைய இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பாஜ அல்லாத பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அவரை பின்பற்றி தங்கள் மாநிலங்களிலும் சிபிஐ.க்கு அளித்துள்ள ஒப்புதலை ரத்து செய்வது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். கர்நாடக அரசும் இந்த ஒப்புதலை ரத்து செய்து விட்டதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் ஒப்புதலை ரத்து செய்யும் நடவடிக்கையை தொடங்கி விட்டார். ‘‘எங்கள் மாநிலத்துக்குள் சிபிஐ.யை அனுமதிக்க மாட்டோம்’’ என்று அவர் நேற்று அறிவித்தார். இது, மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிபிஐ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளதால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. அதன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், தங்கள் மாநிலத்துக்குள் நுழையவும் மாநில அரசுகள் தடை விதித்தால், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே மிகப்பெரிய அரசியலமைப்பு சட்ட மோதல் மற்றும் அதிகார மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.மாநில அரசால் தடுக்க முடியுமா?சிபிஐ அமைப்பு ‘டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டம் - 1946’ன், 6வது பிரிவின் கீழ் செயல்படுகிறது. அதன் செயல்பாடுகள், இந்த சட்டப்பிரிவுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.  அதன்படி, டெல்லிக்கு வெளியே  எந்தவொரு மாநிலத்திலும், அந்த அரசுகளின் அனுமதியின்றி  சிபிஐ.யால் நேரடியாக விசாரணை நடத்த முடியாது. எனவேதான், தனது சுதந்திரமான விசாரணைக்கு இந்த கட்டுப்பாடு தடையாக இருப்பதால், இந்த சட்டப்பிரிவை நீக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த  2013ம் ஆண்டு கோரியது. அப்போது அது தாக்கல் செய்த மனுவில், ‘10 மாநில அரசுகள் மட்டுமே சிபிஐ நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளன. மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்த, வழக்குகளின் அடிப்படையில் அனுமதி பெற வேண்டியுள்ளது’ என கூறியது. அதே நேரம், எந்த மாநிலத்திலும் எந்த வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐ.க்கு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியும். அப்படி நடந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதியின்றி சிபிஐ.யால் நேரடியாக விசாரணை நடத்த முடியும். அதற்கு, மாநில அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.பாஜ ஆளும் மாநிலத்திலும் சிபிஐ.க்கு அனுமதி இல்லை ஆந்திர திட்டக்குழுவின் துணைத் தலைவர் குடும்மா ராவ் கூறுகையில், ‘‘நாட்டில் 10 மாநிலங்களை தவிர, மற்ற எந்த மாநிலத்திலும் சிபிஐ.க்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. பாஜ ஆளும் சட்டீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலத்தில் கூட சிபிஐ.க்கு அனுமதி இல்லை. இதை உச்ச நீதிமன்றத்திலேயே சிபிஐ தெரிவித்துள்ளது. ஆந்திரா இந்த நடவடிக்கை எடுத்தது பற்றி பாஜ ஏன் கூப்பாடு போடுகிறது என தெரியவில்லை’’ என்றார்.‘நாட்டுக்கு தான் இழப்பு’சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ தனது விசாரணையை எந்த மாநிலத்திலும் நடத்த முடியும். அதே நேரம், சிபிஐ.க்கு தடை விதிக்கும் மாநிலங்களின் இதுபோன்ற அரசாணைகள், சிபிஐ.யின் வழக்கு விசாரணைகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இது நாட்டுக்குத்தான் இழப்பு’’ என்றார்.சிபிஐ என்ன செய்யும்?சிபிஐ  நடவடிக்கைக்கு ஒரு மாநிலம் மறுத்தால், நீதிமன்றத்தை அணுகி அதற்கான  அனுமதியை சிபிஐ பெற முடியும். அதே நேரம், அதன் விசாரணைக்கு மாநில போலீசாரின்  ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் தேவை. அதற்கு மாநிலங்கள் மறுத்தால் சிபிஐ பல்வேறு சிக்கல்களை சந்திக்க  நேரிடும்.‘ஊழல் அதிகரிக்க வாய்ப்பு’சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் லக்ஷ்மி நாராயணன் கூறுகையில், “சிபிஐ.க்கு இதுபோல் தடை விதித்து உத்தரவிட மாநில அரசுகளுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால், இந்த உத்தரவால் ஆந்திராவில் ஊழல் பெருகவும் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

மூலக்கதை