புதிய பதவியை ஏற்க மறுப்பு: மத்திய நிதித்துறை செயலர் ஹஸ்முக் அதியா 30ல் ஓய்வு: அருண் ஜெட்லி பாராட்டு

தினகரன்  தினகரன்
புதிய பதவியை ஏற்க மறுப்பு: மத்திய நிதித்துறை செயலர் ஹஸ்முக் அதியா 30ல் ஓய்வு: அருண் ஜெட்லி பாராட்டு

புதுடெல்லி: மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். கடந்த 2014ம் ஆண்டு நவம்பரில் மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ஹஸ்முக் அதியா. 1981ம் ஆண்டு குஜராத் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், பிரதமர் மோடி பதவியேற்ற பின் நிதித்துறை செயலாளராக பொறுப்பேற்றார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவற்றை இவர் திறம்பட செய்தார். இவர் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவரை பாராட்டி பேஸ்புக்கில் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள  பதிவில் கூறியிருப்பதாவது:  டாக்டர்.ஹஸ்முக் அதியா ஓய்வு பெறுகிறார். மிகவும் திறமையான, ஒழுக்கமான  அரசு ஊழியர். குறை கூற முடியாதபடி நாணயமாக பணியாற்றினார். ஆன்மீகம், யோகாவில் ஈடுபடும்போது மட்டும்தான் இவர் தனது பணியில் இருந்து விலகியிருப்பார். இவரது திறமையையும், அனுபவத்தையும் அரசு வேறு வழியில் பயன்படுத்த விரும்பியது. ஆனால், ஓய்வுக்குப்பின் ஒருநாள் கூட பணியாற்ற மாட்டேன் என அவர் ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார். அவர் தனது நேரத்தை மகனுடன் செலவழிப்பார் என நினைக்கிறேன். ஜிஎஸ்டி.யை கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி காலக்கெடுவுக்குள் அமல்படுத்தியதில் அவரின் முயற்சிகள் முக்கியமானது. அந்தப் பணிகளை குறித்த நேரத்தில் சரியாக முடித்தார். வருவாய் செயலாளராக அவர் பணியாற்றிய போதும், வரி வரம்பு அதிகரித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக பணத்தை டெபாசிட் செய்தவர்களை கண்டுபிடித்ததிலும் அவரது பணி சவாலானது. நிதித்துறை அமைச்சகத்தில் அவரது 4 ஆண்டு பணி மிகச் சிறப்பானது. அவரது ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். நன்றி டாக்டர்.அதியா. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை