நீர் வழித்தடத்தில் கட்டடங்கள்...தூள் தூள்!இடித்து அகற்றியது மாநகராட்சி

தினமலர்  தினமலர்
நீர் வழித்தடத்தில் கட்டடங்கள்...தூள் தூள்!இடித்து அகற்றியது மாநகராட்சி

கோவை:நீர் வழித்தடங்கள் மற்றும் ரோடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரு கோவில்கள் உட்பட, 128 கட்டடங்களை, கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.கோவை கணபதி, மேட்டுப்பாளையம் ரோடு - சத்தியமங்கலம் ரோட்டை இணைக்கும் தாகூர் ரோடு மற்றும் மணியகாரம்பாளையம் ரோடு, முல்லை நகர் பகுதிகளில், ரோடு மற்றும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன.
இவற்றை காலி செய்ய, மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும், அப்பகுதியில் வசித்தவர்கள் செவிசாய்க்கவில்லை.ஆக்கிரமிப்பை தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள, மூன்று மாதத்துக்கு முன், நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு கீரணத்தத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மாற்று வீடு ஒதுக்கப்பட்டது. இருப்பினும் பலர் அவற்றுக்கு செல்லவில்லை. அதனால், ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் நேற்று அதிரடியாக இடித்து அகற்றினர்.
மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''பல ஆண்டுகளாக நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்பில் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. ''குடிசை மாற்று வாரியம் வழங்கிய வீடுகளுக்கு மாறாமல், சிலர் இப்பகுதியிலேயே குடியிருந்து வந்தனர். தாகூர் ரோட்டில், 107, முல்லை நகர் பகுதியில், 19, இரு கோவில்கள் என, 128 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இப்பகுதியில் விரைவில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

மூலக்கதை