குஜராத்துக்காக கர்ஜிக்கும் சேலத்து சிங்கம்

தினகரன்  தினகரன்
குஜராத்துக்காக கர்ஜிக்கும் சேலத்து சிங்கம்

புரோ கபடி லீக் தொடரில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியில் முக்கிய வீரராக இருப்பவர்  பிரபஞ்சன். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர். 2, 3வது சீசன்களில் யு மும்பா அணியிலும், 4வது சீசனில் தெலுகு டைட்டன்சிலும், 5வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். முதல் 3 சீசன்களிலும் வாய்ப்புக்காக காத்திருந்தார். தமிழ் தலைவாஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கேப்டன் அஜய் தாக்கூருக்கு அடுத்து அதிக ரெய்டு புள்ளிகள் குவித்து அசத்தினார். அது மட்டுமல்ல, அந்த சீசனில் பங்கேற்ற 12 அணிகளில் விளையாடிய வீரர்களில் அதிக புள்ளிகள் (124 புள்ளி) குவித்த 8வது வீரர். இப்போது  குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். அணியின் சொந்த ஊரான அகமதாபாத்தில் போட்டிகள் நடக்கின்றன. இங்கு நேற்று முன்தினம்  நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் அணியை குஜராத் வீழ்த்தியது. அந்த வெற்றிக்காக 9 ரெய்டு புள்ளிகளை குவித்த  பிரபஞ்சன் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். அவரிடம் பேசியதில் இருந்து: பள்ளியில் படிக்கும்போதே கபடி போட்டிகளில் பங்கேற்பேன். கல்லூரியில் வாய்ப்புகள் அதிகமாகின. இந்திய அணியின் முன்னாள் முன்னாள் வீரரும், சேலம் மாவட்ட கபடி் சங்க செயலருமான சாமியப்பன் வழிகாட்டுதல்  என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. புரோ கபடி வாய்ப்பு கிடைத்தது.  மேலும் பிபிஏ முடித்து எம்காம் படிக்கும்போதே பெங்களூர் கஸ்டம்சில் வேலைக்கு சேர்ந்தேன். அதனால் படிப்பை பாதியில் விட நேர்ந்தது. ஆனால் கபடி  என்றும் தொடரும். குஜராத் அணி  பயிற்சியாளரின் வழிகாட்டுதல், சக வீரர்களின் ஒத்துழைப்பால் சிறப்பாக விளையாட முடிகிறது. நான் அதிக புள்ளிகள் எடுக்க வேண்டும் என்பதை விட அணி வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்து விளையாடுகிறோம்.  எல்லா ஆட்டங்களிலும் நாமே விளையாட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நன்றாக விளையாடினாலும்  நம்மை உட்கார வைப்பது ஒய்வுக்காகவும், அடுத்த போட்டியை காயமில்லாமல் ஆரோக்கியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகதான். எங்கள் திறமைகளை வெளிக்  கொண்டு வர புரோ கபடி சிறந்த வாய்ப்பாக உள்ளது. எனது அப்பா குமரவேல் திறமையான கபடி வீரர். அவர் காலத்தில் புரோ கபடி இருந்திருந்தால் நாடறிந்த வீரராக இருந்திருப்பார்.  இளம் வீரர்களுக்கு மட்டுமல்ல அனுபவ வீர்களுக்கும் புரோ கபடி நல்ல தளமாக உள்ளது. இவ்வாறு பிரபஞ்சன் கூறினார்.பொறியியல் பட்டதாரி கலையரசன்! குஜராத் அணிக்காக விளையாடி வரும் இன்னொரு தமிழக வீரர் சி.கலையரசன். நெல்லை ஆலங்குளம் பெத்தநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. தற்காப்பு ஆட்டக்காரரான இவர் 5வது சீசனிலும், இந்த சீசனிலும் குஜராத் அணியில் தொடர்கிறார்.  நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.  ஒவ்வொரு ஆட்டத்திலும் மாற்று வீரராக கட்டாயம் இடம் பிடிக்கிறார். இது குறித்து கூறுகையில் ‘தனிப்பட்டவர்களின் சாதனையை விட அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் தருகிறோம். அணி தொடர்ந்து வெற்றிகளை குவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வாய்ப்பு வரும்போது அணியின் வெற்றிக்காக உழைப்பேன்’ என்கிறார் உற்சாகமாக.

மூலக்கதை