ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்: இங்கிலாந்து முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்: இங்கிலாந்து முன்னேற்றம்

செயின்ட் லூசியா: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் அரை இறுதியில் விளையாட, ஏ பிரிவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. பி பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறிவிட்டன.  ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன்  வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது 3வது லீக் ஆட்டத்தில் நேற்று இலங்கை அணியை எதிர்கொண்டது. டேரன் சம்மி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் அதிரடியாக 62 ரன் (36 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். டோட்டின் 49 ரன் (35 பந்து, 8 பவுண்டரி), கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 41 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மெக்லீன் 17 ரன்  விளாசினர்.  அடுத்து 20 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 17.4 ஓவரில் 104 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.  கேப்டன் ஜெயாங்கனி அதிகபட்சமாக 44 ரன் (35 பந்து, 7 பவுண்டரி), நீலாக்‌ஷி டி சில்வா 11, ஹாசினி பெரேரா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். 83 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் 6 புள்ளிகளுடன் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஹேலி மேத்யூஸ் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.வெளியேறியது தென் ஆப்ரிக்கா: ஏ பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா மோதின. டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 19.3 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிரையான் 27, டு பிரீஸ் 16, லிஸெல் லீ 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் நதாலியே ஸ்கிவர், ஷ்ரப்சோல் தலா 3 விக்கெட், கிறிஸ்டி கார்டன் 2, லின்சி ஸ்மித் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 86 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் டேனியல் வியாட் 27 ரன், பியூமான்ட் 24 ரன் விளாசினர். ஸ்கிவர் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 14.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து எளிதாக வென்றது. கேப்டன் ஹீதர் நைட், ஏமி ஜோன்ஸ் தலா 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்கிவர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.மூன்று லீக் ஆட்டத்தில் 5 புள்ளிகள் பெற்ற (2 வெற்றி, 1 ரத்து) இங்கிலாந்து அணியும் ஏ பிரிவில் இருந்து அரை இறுதிக்கு முன்னேறியது. இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன. ஷ்ரப்சோல் ஹாட்ரிக் தென் ஆப்ரிக்கா அணியுடன் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து வீராங்கனை அன்யா ஷ்ரப்சோல் 3.3 ஓவரில் 1 மெய்டன் உட்பட 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். தென் ஆப்ரிக்கா அணியின் கடைசி 3 வீராங்கனைகளும் ஷ்ரப்சோல் வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஷ்ரப்சோல் ஹாட்ரிக் சாதனையை வசப்படுத்தினார்.

மூலக்கதை